மும்பை:

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி செய்யும் வியாபாரம் 80 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பதாக மும்பை ஓட்டல் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு பொருட்கள் பார்சல் மற்றும் வீடுகளுக்கான நேரடி என்பது ஒட்டு மொத்த ஓட்டல் தொழிலில் 30 சதவீதமாக இருந்தது. இதற்கு முன் 5 சதவீத மதிப்பு கூட்டு வரி மட்டுமே விதிக்கப்பட்டது. கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.

இதில் பார்சல், நேரடி டெலிவிரிக்கும் வரி விதிக்கப்படுகிறது. ஏசி வசதி இல்லாத ஓட்டல்களில் 12 சதவீதமும், ஏசி ஓட்டல்களில் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதில் 9 சதவீதம் மாநில அரசுக்கும், 9 சதவீதம் மத்திய அரசுக்கும் செல்கிறது.

ஆயிரம் ரூபாய் பில்லுக்கு 180 ரூபாயை வரியாக வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியுள்ளது. ஓட்டல் தொழிலுக்கு அதிகபட்சம் 13 சதவீதத்திற்கு மேல் வரி விதிப்பு செய்யக்கூடாது என்ற கோரிக்கையை மாநில அரசு கிடப்பில் போட்டுவிட்டது என்று ஓட்டல் உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

‘‘பார்சல் மற்றும் வீட்டுக்கு நேரடி டெலிவரி ஆகியவை 80 சதவீதம் குறைந்துள்ளது. மக்கள் ஜிஎஸ்டி செலுத்த தயாராக இல்லை. இதனால் தொழிலில நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என்று இந்தியன் ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்கள் சங்க தலைவர் ஆதர்ஷ் ஷெட்டி கூறினார்.

மற்றொரு ஓட்டல் இயக்குனர் கமலேஷ் பாரோத் கூறுகையில், ‘‘ தினமும் 15 முதல் 20 ஆர்டர்கள் வரும். இது தற்போது 5 என்ற எண்ணிக்கையாக குறைந்துள்ளது. பல வாடிக்கையாளர்கள் டெலிவரி சமயத்தில் ஜிஎஸ்டி.யை பார்த்துவிட்டு ஆர்டரை ரத்து செய்கின்றனர். இதனால் அனைத்து தயாரிப்புகளும் வீணாகிறது’’ என்றார்.

‘‘அதனால் மாநில அரசு ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வு கூட்டத்தில் பார்சல் மற்றும் நேரடி டெலிவரிக்கு 12 சதவீத வரி வதிக்க வலியுறுத்த வேண்டும்’’ என்று ஓட்டல் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.