தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணுக்கு ரூ.3.60 லட்சம் அபராதம் விதித்த குடியிருப்போர் சங்கம்

மும்பை

தெருநாய்களுக்கு உணவளித்ததற்காக ஒரு பெண்ணுக்கு மும்பை அடுக்குமாடி குடியிருப்போர் சஙகம் ரூ.3.60 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

மும்பை காண்டிவில்லி பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புக்கள் கொண்ட வளாகம் ஒன்று அமைந்துள்ளது.    இந்த வளாகத்தில் வசித்து வரும் நேகா தாத்வானி என்னும் பெண் மிருகங்கள் மீது இரக்கம் உள்ளவர்.   அந்த வளாகத்தில் உள்ள தெருநாய்களுக்கு தினமும் உணவளிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

கடந்த மாதம அவருக்கு குடியிருப்பு சங்கம் அளித்த பராமரிப்பு தொகை பில்லில் அவர் ரூ. 3.60 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும்  என இருந்துள்ளது.  அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.   அப்போது வளாகத்தில் உள்ள தெருநாய்களுக்கு உணவு அளிக்கக் கூடாது என சட்டம் உள்ளதாகவும் அதை நேகா மீறியதால் அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சங்கத் தலைவர் மிதேஷ் போரா, “இந்த வளாகத்தினுள் ஏராளமான ஆதரவற்ற நாய்கள் வசித்து வருகின்றன.   அவைகள் தினமும் வயதானோர், குழந்தைகள் உள்ளிட்டோரை பார்த்து குரைப்பதால் அவர்கள் பயந்து வருகின்றனர்.    அது மட்டுமின்றி இரவும் பகலும் இந்த நாய்களின் இரைச்சலால் பலர் அமைதி கெடுவதாக புகார் அளித்துள்ளனர்.

இங்கு உணவு கிடைக்கவில்லை என்றால் நாய்கள் இங்கிருந்து வெளியேறி விடும்.  ஆகவே இந்த நாய்களுக்கு உணவு அளிப்போருக்கு அபராதம் விதிக்க சங்கத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.   இதற்கு 98% குடியிருப்போர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மையானோருக்கு துயரம் விளைவிக்க கூடாது என்பதால் நான் இந்த விதிகளை பின்பற்றாதோருக்கு அபராதம் விதித்துள்ளேன்.  வளாகத்துக்கு உள்ளே நாய்களுக்கு உணவு அளிப்பதற்கு தான் தடை விதிக்கப்படுள்ளது.   அந்த நாய்களை வெளியே அனுப்பி அங்கு உணவளிப்பதை யாரும் தடை செய்யவில்லை.” என தெரிவித்துள்ளார்.

அபராதம் குறித்து நேகா, “எனக்கு ஒரு நாளைக்கு ரூ.2500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   அந்த நாய்கள் ஆதரவற்றவை அல்ல.   இதே வளாகத்தில் பிறந்து வளர்ந்த நாய்களுக்கு நான் உணவளிப்பதில் தவறில்லை.   நான் சங்கத்தின் விதி முறை பற்றி ஏற்கனவே விலங்குகள் ஆணையத்துக்கு புகார் அளித்தேன்.  அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை.

நான் மனிதாபிமான அடிப்படையில் நாய்களுக்கு உணவளித்தேன்.   அதற்காக நான் அபராதம் கட்டப் போவதில்லை.   நான் தரவேண்டிய பராமரிப்பு தொகையை மட்டும் அளித்து விட்டு நான் நகருக்கு வெளியே வீடு பார்த்து செல்ல உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.