மும்பை:

உலகம் முழுவதும் உள்ள மகாத்மா காந்தி சிலை அகற்ற வேண்டும் என்றும், மகாத்மாவை கொன்ற கோட்ஸேக்கு நன்றி தெரிவித்தும் மும்பை ஐஏஎஸ் அதிகாரி ட்விட்  செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை மாநகராட்சி துணை கமிஷனராக இருப்பவர் நிதி சவுத்ரி.

சமீபத்தில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உலகம் முழுவதும் உள்ள காந்தி சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்றும், காந்தி பெயரில் உள்ள சாலைகள் பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு, மகாத்மாவை கொன்ற நாதுரான் கோட்ஸேவுக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார். மறைமுகமாக காந்தி கொல்லப்பட்ட 30.01.1948 என்று குறிப்பிட்டிருந்தார்.

ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்ரியின் இந்த சர்ச்சை ட்விட்டுக்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் ஜிதேந்திர அவாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல தரப்பிலும் ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்ரிக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தனது ட்விட் பதிவுக்கு நிதி சவுத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

நகைச்சுவையான அந்த பதிவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேசத் தந்தை காந்தியை ஒருபோதும் நான் அவமதிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.