Mumbai Indians to a five-wicket win over laggards Royal Challengers Bangalore

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 10 போட்டியில் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

 

மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் சாமுவேல் பத்ரீ, சச்சின் பேபி, ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஷேன் வாட்சன், மன்தீப் சிங், அனிகேத் சவுதாரி சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில் காயம் அடைந்துள்ள ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக கரண் ஷர்மா இடம் பெற்றார். ஆர்சிபி தொடக்க வீரர்களாக கேப்டன் கோஹ்லி, மன்தீப் சிங் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.4 ஓவரில் 31 ரன் சேர்த்தது. மன்தீப் 17 ரன் எடுத்து கரண் ஷர்மா பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா வசம் பிடிபட்டார். பெரிய ஸ்கோர் அடிப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய கோஹ்லி, 20 ரன் எடுத்த நிலையில் (14 பந்து, 2 சிக்சர்) மெக்லநாகன் பந்துவீச்சில் ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

டிராவிஸ் ஹெட் – டி வில்லியர்ஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்தது. ஹெட் 12 ரன், டி வில்லியர்ஸ் 43 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். ஷேன் வாட்சன் 3 ரன் மட்டுமே எடுத்து பூம்ரா வேகத்தில் கிளீன் போல்டாக பெங்களூர் அணி 13.4 ஓவரில் 108 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் கேதார் ஜாதவ் – பவான் நேகி ஜோடி உறுதியுடன் போராடி 54 ரன் சேர்த்தது.
நேகி 35 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), கேதார் 28 ரன், அரவிந்த் (0-ரன் அவுட்) ஆகியோர் மெக்லநாகன் வீசிய கடைசி ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. ஆடம் மில்னி (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை பந்துவீச்சில் மெக்லநாகன் 3, குருனல் 2, கரண், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

 

இதைத் தொடர்ந்து, 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. பார்திவ், பட்லர் இருவரும் துரத்தலை தொடங்கினர். சவுதாரி வீசிய முதல் பந்திலேயே பார்திவ் டக் அவுட்டாகி வெளியேற மும்பைக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து பட்லருடன் நிதிஷ் ராணா இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்தனர். பட்லர் 33, ராணா 27 ரன் எடுத்து நேகி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
போலார்டு 17 ரன் எடுத்து வெளியேற, குருனல் பாண்டியா 2 ரன் எடுத்த நிலையில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பியது மும்பை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. கரண் ஷர்மா 9 ரன் எடுத்து வாட்சன் வேகத்தில் மில்னியிடம் பிடிபட்டார். இக்கட்டான தருணத்திலும் பதற்றமின்றி விளையாடிய கேப்டன் ரோகித் ஷர்மா – ஹர்திக் பாண்டியா ஜோடி ஒரு பந்து எஞ்சியிருக்க வெற்றியை வசப்படுத்தியது. மும்பை அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து வென்றது. ரோகித் 56 ரன் (37 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்திக் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் நேகி 2, சவுதாரி, வாட்சன், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ரோகித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 10 லீக் ஆட்டத்தில் 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்ற மும்பை, பிளே ஆப் சுற்றை உறுதி செய்தது.