ஐபிஎல்: கொல்கத்தாவை முட்டித் தள்ளிய மும்பை!

Mumbai Indians won by 4 wickets , with 1 ball remaining

ஐபிஎல் 10 வது சீசனில், நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித், பவுலிங்கைத் தேர்வு செய்தார்.கொல்கத்தா அணிக்கு காம்பீர், கிறிஸ்லின் ஜோடி நல்ல தொடக்கத்தைத் தந்தது. எனினும் மும்பையின் குர்னல் பாண்ட்யாவின் சுழலில் சிக்கி காம்பீரும் (19), உத்தப்பாவும் (4) வெளியேறினர். பும்ராவின் பந்து வீச்சில் லின் (32) வீழ்ந்தார். யூசுப் பதான் (6), சூர்யகுமார் யாதவ் (17) விரைவிலேயே வெளியேற, மணிஷ் பாண்டே மட்டும் நின்று விளையாடி அரை சதத்தை விளாசித் தள்ளினார். முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுகளுக்கு 178 ரன்களை எடுத்திருந்தது. மும்பையின் குர்னல் அதிகபட்சமாக 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் பார்த்திவும் (30), பட்லரும் (28) நல்ல தொடக்கத்தையே தந்தனர். கேப்டன் ரோஹித் (2) , குர்னல் பாண்ட்யா (11), போலார்டு (17) ஆகியோர் விரைவிலேயே வெளியேறினர். ரானா அரை சதமடித்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா இரண்டு பவுண்டரிகளை விளாச, மும்பை அணி 19.5 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனே அணியிடம் வீழ்ந்த சோர்வில் இருந்த மும்பை அணி, இந்த வெற்றியின் மூலம் சுறுசுறுப்படைந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.