மும்பை: மே 15 வரையிலான நிலவரப்படி, மொத்தம் 17,671 கொரோனா தொற்று நோயாளிகள் மற்றும் 655 மரணங்கள் என்ற கணக்கின்படி, நாட்டிலேயே கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரமாக திகழ்கிறது மும்பை.
ஒவ்வொரு நாளும், இந்தியாவின் வர்த்தக தலைநகரில் 1000 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். இந்த வகையில், எந்தவொரு இந்திய நகரத்தைக் காட்டிலும், மும்பையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
கடந்த மார்ச் 11 முதல் ஏப்ரல் 30 வரையிலான மொத்தம் 51 நாட்கள் காலக்கட்டத்தில், வெறும் 7061 நோயாளிகளே கண்டறியப்பட்டனர். ஆனால், மே மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் கூடுதலாக 10000 நோயாளிகள் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.
மராட்டிய அரசின் புள்ளிவிபரப்படி, கோவிட்-19 நோயாளிகளில், 27% பேர்‍ லேசான அறிகுறிகளைக் கொண்டவர்கள். ஆனால், அவற்றில் 3% பேர் அபாய நிலையில் உள்ளவர்கள் மற்றும் உடனடி தீவிர மருத்துவக் கவனிப்பு தேவைப்படுபவர்கள்.
மும்பை நகரம் தற்போது எதிர்கொண்டிருக்கும் இக்கட்டில் இது ஒரு சிறு பகுதிதான். ஒட்டுமொத்த நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்கே, மருத்துவமனைப் படுக்கைகளுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.