மும்பை:
நூறு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தற்போது  நிசர்கா புயல் மும்பையை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்க உள்ள இந்த புயல் மும்பையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின் படி, நிசர்கா புயல் பெரும் சூறாவளியாக மாறியுள்ளதுடன், கனமழை மற்றும் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா வைரசால் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ள மும்பை, நிகர்சா புயலால் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மும்பை கடலோர பகுதிகளில் பொதுமக்கள் நடந்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மற்றும் குஜராத் முதல் அமைச்சர்கள் மற்றும் டாமன் மற்றும் டியு, தாதர் மற்றும் நாகர் ஹவேலி நிர்வாகத்திடம் பேசிய பிரதமர் மோடி, புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.


கவனிக்க வேண்டிய 10 குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை, 

  1. மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசுகையில், பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்த புயல் கடும் சூறாவளியாக மாறியுள்ளது. இன்றும் நாளையும் கடலோரப் பகுதிகளில் அலையின் வேகம் கடுமையாக இருக்கும். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அடுத்த இரண்டு நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
  2. புயல் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் இந்த புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன். பொதுமக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கையுடனும், தகுந்த பாதுகாப்பு உடன் இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் முதலமைச்சர்களுடனும், டாமன் டியு, தாதர் மற்றும் நாகர் ஹாவேலி ஆகிய இடங்களின் நிர்வாக அதிகாரிகளுடன் பேசியுள்ளார். மேலும், புயல் பாதிப்புகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் பிரதமர், அவர்களிடம் உறுதி அளித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சரை தொடர்ப்பு கொண்டு, புயல் பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிகைகள் குறித்து ஆலோசித்துள்ளார்.
  3. நிசர்கா புயல், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் துவங்கி மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்லும். இதுகுறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், மகாராஷ்டிராவின் தாழ்வான பகுதிகளில், இந்த சூறாவளி காற்று ஒன்று முதல் இரண்டு மீட்டர் உயரத்தில் சுழற்றி அடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுதத சில மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகரும். வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகரும் புயல் மகாராஷ்டிராவின் வடக்கு பகுதி மற்றும் குஜராத்தின் தெற்கு கடலோர பகுதியில் ( ஹரிஹேச்வர் மற்றும் டாமன், மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம் அருகே)  இன்று  கரைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோரப் பகுதிகளில் மீட்பு பணிக்காக  பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 30 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மீட்பு குழுவிலும்  45 வீரர்கள்  இடம் பெற்றுள்ளனர். மேலும் கூடுதலாக ஐந்து குழுக்கள் தேவை என்று குஜராத் அரசு கேட்டதை அடுத்து, 15 குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி இரண்டு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு தலைவர் எஸ் என் பிரதான் தெரிவித்தார். மகாராஷ்டிராவுக்கு 10 குழுக்கள் அனுப்பபட்டுள்ள நிலையில், கூடுதலாக ஆறு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
  5. மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில முன்னெச்சரிகை நடவடிக்கைகளை அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே  அலுவலகம் பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில், புயலில் சேதமடைந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்பது இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மழை நீரில் மூழ்கும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உடனடியாக வெளியேற்ற மும்பை மெட்ரோபாலிட்டன் பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவ மனைகள், அவசர உதவிக்காக தயாராக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்ஹார் மாவட்டத்தில் உள்ள அணு உலையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மின் தடை ஏற்பட்டால் அதை சரி செய்யவும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  6. புயல்  காரணமாக மரங்கள் விழுந்தாலும், நிலச்சரி மற்றும் கன மழை போன்ற  பாதிப்புகளை எதிர்கொள்ள மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர் என்றும் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகள் குறித்த தகவல் தெரிவிக்க மகாராஷ்டிரா தலைமை செயலக கட்டிடத்தில்  கட்டுபாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டுபாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவைகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மும்பையில் மட்டும் மூன்று பேரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்ஹார் மாவட்டத்தில் இரண்டு மற்றும் ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று என பேரிடர் மீட்பு குழுக்கள் நிறுத்தப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  7. குஜராத்தின் கடலோர கிராமங்களாக வால்சாத் மற்றும் நாவாசரி மாவட்டங்களில் வசித்து வந்த 20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய வால்சாத் மாவட்ட ஆட்சியர் ஆர் ஆர் ராவல், புயல் பாதிப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 35 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இந்த கிராமத்திற்கு அருகேயுள்ள நாவாசரி மாவட்டத்தில் 12 கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்து 200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
  8. இந்திய கடலோரப்படை படகுகள் மற்றும் விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. மீனவர்கள் மற்றும் வர்த்த ரீதியான படகுகள் உடனடியாக துறைமுகத்திற்கு திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றும் கடலோர காவல் படையினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்த பகுதியில் மோசமான காலநிலை நிலவுவதுடன் கடும் மழையும் பெய்து வருகிறது. இதனால், மீனவர்கள்  எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தங்கள் படகுடன் துறைமுகத்திற்கு திரும்ப வேண்டும் என்றுக் கேட்டு கொண்டுள்ளோம் என்றார்.
  9. மகாராஷ்டிரா ஏற்கனவே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 2 ஆயிரத்து 362 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் அமலாகத்துறையினர் ஏற்கனவே கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மும்பையில் இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    கடந்த இரண்டு மாதத்தில் இந்திய கடலோர பகுதியை தாக்கும் இரண்டாவது புயல்
  10. நிசர்கா புயல்.  கடந்த மாதம் அம்பன் புயல்,வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்தது. இந்த புயலால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டன.  இந்திய கடலோர பகுதியை தாக்கியது. இதில் 100 பேர் உயிரிழந்ததுடன், லட்சக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த  புயலால் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட பாதிப்பு ஏற்பட்டதாக மேற்கு வந்த முதலமைச்சர் மதிப்பீடு செய்துள்ளார்.