ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய நிறுவனத்திடம் மும்பை போலீஸ் விசாரணை – சம்மன் இல்லாமல் ஆஜரான பட்னவிஸ் ஏற்படுத்திய பரபரப்பு

 

மூச்சு திணறல் ஏற்படும் அளவுக்கு தீவிர கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ஒரே மருந்து ரெம்டெசிவிர்.

இந்தியாவின் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மாதம் ஒன்றுக்கு 38.8 லட்சம் டோஸ் அளவுக்கு இந்த மருந்தை தற்போது உற்பத்தி செய்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்நாட்டு தேவை உயர்ந்துவருவதால் இதன் உற்பத்தியை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது, மேலும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் தடைவிதித்ததோடு இதன் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், யூனியன் பிரதேசமான டாமன் பகுதியில் உள்ள ப்ரக் பார்மா ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரித்து மும்பையில் உள்ள ஒரு கிடங்கில் பதுக்கிவைத்திருப்பதாகவும் அதனை தடையை மீறி அரசுக்கு தெரியாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் இயக்குனரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

ப்ரக் பார்மா நிறுவனத்தை சேர்ந்த அந்த இயக்குனர் விசாரணைக்கு ஆஜரான அரை மணிநேரத்தில் அங்கு வந்த மகாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலைமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவருமான பிரவீன் தரிக்கர் ஆகியோரால் விலே பார்லே காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

“அந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மருந்துகள் மகாராஷ்டிரா அரசுக்கு பா.ஜ.க. சார்பாக நன்கொடையாக வழங்க நாங்கள் தான் வாங்கி வைத்திருக்கிறோம், இதனை தெரிந்து கொண்டு எங்கள் பெயரை கெடுத்து அரசு அதனை கைப்பற்றுவதற்காகவே இதுபோன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்” என்று அங்கு வந்த செய்தியாளர்களிடம் பரபரப்பு குற்றசாட்டை கூறினார்.

இதனை தொடர்ந்து, அந்த மருந்து பா.ஜ.க. வினர் வாங்கியது தான் என்று எழுத்துபூர்வமாக அறிக்கையும் வெளியிட்டார், பட்னவிஸ். பட்னவிஸ் அறிக்கையை தொடர்ந்து மருந்து நிறுவன இயக்குனரும் விசாரணை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

யூனியன் பிரதேசமான டாமன் பகுதியில் தயாரிக்கப்படும் மருந்துகளை மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்கு உரிய அனுமதி பெறவேண்டிய நிலையில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ரெம்டெசிவிர் மருந்து மும்பையில் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கூறிய பிரவீன் தரிக்கர், மும்பையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதனை சமாளிக்க தேவையான அனைத்து உள்கட்டமைப்பையும் பா.ஜ.க. ஏற்படுத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக ப்ரக் பார்மா நிறுவனத்துடன் பேசி ரெம்டெசிவிர் மருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த மருந்தை விற்பதற்கு அவர்களுக்கு உரிமம் இல்லை என்று அந்த நிறுவன அதிகாரிகள் என்னிடம் கூறியதை தொடர்ந்து மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா விடம் கூறி இதற்கான அனுமதி பெறப்பட்டது, மேலும், இந்த மருந்துக்கான 4.75 கோடி ரூபாய் மொத்தமும் பா.ஜ.க. செலுத்தியுள்ளது என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய மும்பை இணை ஆணையர் மஞ்சுநாத் சிங்கே, “உயிரிழப்பு அதிகரித்து வரும் வேலையில் பெருமளவிலான உயிர்காக்கும் மருந்து எந்த வித பயன்பாடும் இல்லாமல் ஓரிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அதுகுறித்து விளக்கம் பெறவே நாங்கள் விசாரணைக்கு அழைத்தோம்” என்று கூறியிருக்கிறார்.

நள்ளிரவில், நடந்த இந்த விசாரணையை தொடர்ந்து சம்மன் இல்லாமல் ஆஜரான முன்னாள் முதல்வர் பட்னவிஸ் மற்றும் பா.ஜ.க. வினரின் நடவடிக்கை மஹாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.