துபாய்: டெல்லி அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்று, ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி.

முதலில் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களைக் குவித்தது.

பின்னர், களமிறங்கிய டெல்லி அணியில் பெரும் சோகம். பிரித்வி ஷா, ஷிகர் தவான் மற்றும் ரகானே ஆகிய முதல் மூன்று பேட்ஸ்மென்கள் டக் அவுட். கேப்டன் ஷ்ரேயாஸ் 12 ரன்களில் வெளியேற, டெல்லியின் தோல்வி அப்போதே உறுதிசெய்யப்பட்டது.

அதேசமயம், மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் அக்சார் படேல் ஆகியோர் போராடினர். ஸ்டாய்னிஸ் 46 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 65 ரன்களையும், அக்சார் 33 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களையும் அடித்தனர்.

ரபாடா 15 ரன்களை அடிக்க, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே டெல்லி அணியால் எட்ட முடிந்தது.

மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா 4 ஓவர்கள் வீசி, 1 மெய்டனுடன் 14 ரன்களை மட்டுமே வழங்கி, 4 விக்கெட்டுகளை அள்ளினார். பெளல்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஐதராபாத் – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் வரும் 8ம் தேதி டெல்லி அணி மோதும். இதில் வென்றால், இறுதிப் போட்டியில் மீண்டும் மும்பையை சந்திக்கும் அந்த அணி.