சீனப் பொருட்கள் நிராகரிப்பு : தேவையான இந்தியப் பொருட்கள் இல்லையே – வணிகர்கள் ஆதங்கம்

மும்பை

சீனா எல்லையில் ராணுவத்தை குவிப்பதை கண்டிக்கும் வகையில் சீனப் பொருட்களை யாரும் வாங்கவேண்டாம் என மும்பை பள்ளிகளின் முதல்வர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.  ஆனால் வணிகர்கள் சீனப் பொருட்களை நிராகரிக்கும்  அளவுக்கு இந்தியப் பொருட்களின் உற்பத்தி இல்லை என கூறி உள்ளனர்

மும்பையில் நடந்த பள்ளி முதல்வர்கள் சங்கக் கூட்டத்தில், எல்லையில் சீனாவால் பதட்டம் ஏற்படுவதை கண்டிக்கும் வகையில் அனைத்து பள்ளி மாணவர்களும் ஊழியர்களும் சீனப் பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.  நகரில் உள்ள பள்ளிகளில் இருந்து 1900 முதல்வர்கள் கலந்துக் கொண்ட இந்தக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நாடெங்கும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.

இது குறித்து சங்கத்தின் செயலாளர் பிரசாந்த் கூறுகையில், “நமது எல்லையில் தேவையற்ற பதட்டத்தை சீனா உண்டாக்குகிறது.  இந்நாட்டின் மக்களாகிய நாம் சீனப் பொருட்களை வாங்குவதன் மூலம் சீனப் பொருளாதாரத்தை முன்னேற்றக் கூடாது.  பெற்றோர்களும், மாணவர்களும் நமது உள்நாட்டுத் தயாரிப்பை வாங்கி நமது பொருளாதாரத்த்தை முன்னேற்ற வேண்டி, என தெரிவித்தார்.

இது போலவே அந்தேரியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனமும், சீனப் பொருட்களுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.  இதற்கு முன்பே பாக் பயங்கரவாதி ஜைஷ் ஏ முகமதுக்கு சீனா ஆதரவு அளித்த போதிலிருந்தே சீனப் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என பல தொண்டு நிறுவனங்களும் குரல் கொடுத்தன.

இதே நேரத்தில் சீனப் பொருட்களை நிராகரிப்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன

மும்பை பஜார் ரோட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பலர் தெரிவித்ததாவது :

”இங்கு எல்லாக் கடைகளிலுமே சீனப் பொருட்கள் 99% நிறைந்துள்ளது.  சீனப் பொருட்கள் விலை மிகவும் மலிவாகக் கிடைக்கின்றன.  அதே நேரத்தில் நமது தயாரிப்புகளை விடக் கவர்ச்சியாக உள்ளன.  எவ்வளவு விளம்பரம் வந்தாலும் இந்திய பொருட்கள் வாடிக்கையாளர்களைக் கவர்வதில்லை.  சீனப் பொருட்கள் உற்பத்திக் குறைவால் விலை மலிவாகவும், பல வண்ணங்களிலும், பல டிசைன்களிலும் கிடைப்பதால், மக்கள் அதைத்தான் வாங்க விரும்புகிறார்கள்.

ஒரே வகையான காலணிகள் இரண்டு, இந்தியாவில் தயாரித்தது ரூ 150க்கும்,  சீனத் தயாரிப்பு ரூ. 100க்கும் விற்கப்படும் போது, மக்கள் சீனக் காலணிகளையே தேர்ந்தெடுப்பார்கள்.  அது மட்டும் அல்ல ஒரு குழந்தைக்கு ஒரு உடுப்பு வாங்க வரும் போது இந்திய பொருட்களை விட பல பொம்மைகளுடன், வண்ண வண்ணமாக உள்ள சீன தயாரிப்பைத்தான் அந்த குழந்தை கேட்கும்.  அதே போலத்தான் பள்ளிப் பைகளும்.    சணலினால் செய்த இந்திய தோள்பகளை விட, வண்ண வண்ணமான முதுகில் மாட்டிக் கொள்ளும் சீனப் பைகளையே அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.

இந்தியப் பொருட்கள் காரண்டியுடன் வருகிறது உண்மைதான்,  ஆனால் தற்போதைய யூஸ் அண்ட் த்ரோ கல்ச்சரில் காரண்டி தேவையே இல்லை.. கொசுக்களை விரட்டும் பேட்டுகள் போன்றவைகளுக்கு இது பொருந்தும்,”  என கூறுகிறார்கள்.

இந்தியத் தயாரிப்புகளை மட்டும் விற்க வேண்டும் எனில் பல பொருட்களின் உற்பத்தி இந்தியாவில் இன்னும் போதிய அளவிலும், மக்கள் வாங்கும் நிலையிலும் இல்லை, எனவே,  சீனப் பொருட்களை நிராகரிக்கும் முன்பு இந்தியாவின் பொருட்கள் உற்பத்தியை பெருக்குங்கள் என மும்பை கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

வாடிக்கையாளர்கள் பலரும், மலிவான பொருட்களையே விரும்புகிறார்கள்.  அவர்கள் இது பற்றி “தற்போது ஏற்கனவே பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.   ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த பின் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.   பணப்புழக்கம் என சொல்வது வருமானம் குறைந்ததே ஆகும்.  இந்நிலையில் நாங்கள் விலை குறைவான பொருட்களைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.   எங்களுக்கும் தேசப் பற்று நிறையவே உண்டு.  ஆனால் அதற்காக நிறைய பணம் செலவழித்துத் தான் அதை நிரூபிக்க வேண்டுமா? ”என்கின்றனர்.

”சீனப் பொருட்களை விற்பதினால் இரு நாட்டு வணிகர்களுமே பயனடைகிறார்கள் என்பதே பொதுவான கருத்து.