மும்பை

மும்பையை சேர்ந்த ஒரு 12ஆம் வகுப்பு மாணவி புல்லட் ரெயிலுக்கு எதிராக மனு ஒன்றை அளித்துள்ளார்.

சமீபத்தில் மும்பை எல்ஃபின்ஸ்டன் ரோடு ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலர் காயமடைந்ததும், 20க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்ததும் தெரிந்ததே.  மும்பை ரெயில்களில் விபத்துக்கள் ஏற்படுவதும் மரணம் அடைவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   சமீபத்திய மகாராஷ்டிரா போலீசின் ஒரு அறிக்கையின்படி நாளொன்றுக்கு சராசரியாக மும்பை ரெயில் விபத்துக்களில் 9 பேர் மரணம் அடைவதாக தெரிய வந்துள்ளது.

மும்பையை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரேயா சவான்.  இவர் தினமும் ரெயிலில் தனது ஜூனியர் காலேஜுக்கு சென்று வருவது வழக்கம்.   கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியன்று இவருடன் கல்வி பயிலும் மாணவி மைத்ரி ஷா என்னும் மாணவி வசாய் நிலையத்தில் இருந்து பயணம் செய்துக் கொண்டிருந்தார்.  அப்போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார்.   இது ஸ்ரேயாவுக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது,

சமீபத்தில் நடந்த எல்ஃபின்ஸ்டோன் ரோடு ரெயில் நிலைய மரணங்களையும் தினமும் ரெயிலில் நிகழும் விபத்துக்களையும் கண்ட ஸ்ரேயா தனது தோழி தான்வியுடன் சேர்ந்து இணையத்தில் மனு ஒன்றை பிரதமர்,  மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் ரெயில்வே அமைச்சருக்கு அனுப்பி உள்ளார்.  அந்த மனுவில்,  “தற்போது மும்பையில் இருந்து புல்லட் ரெயில் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அதை விட மும்பை ரெயிலில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும்.   பலர் மரணம் அடைவதை உடனடியாக நிறுத்த ஆவன செய்யவேண்டும்.   இதை எல்லாம் செய்து முடிக்காமல் புல்லட் ரெயில் விடுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஆதரித்து இணையத்தில் இதுவரை சுமார் 5000 பேருக்கு மேல் கையெழுத்து இட்டுள்ளனர்.