அத்தியாவசியப் பணியாளர்களுக்கான புறநகர் ரயில் சேவை – மும்பையில் துவங்கியது!

மும்பை: கொரோனா பாதிப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இடையே, 2 மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு அத்தியாவசியப் பணியாளர்களுக்காக, மும்பையில் இன்று(ஜுன் 15) புறநகர் ரயில் சேவை துவங்கப்பட்டது.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் களப்பணியாளர்கள், அத்தியாவசியப் பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் போன்ற பலரும் தங்களது பணிகளை சரியான நேரத்திற்கு சென்று மேற்கொள்ள முடியாமல் அவதியுறுகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பும் புறநகர் ரயில்களை இயக்காதது ஏனோ என பலதரப்பும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, பாதிப்புகளின் தீவிரத்தைக் கணக்கிட்டும், மாநிலத்தின் பல்வேறு நலன்களுக்காகவும் மத்திய அரசு, புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மேற்கு ரயில்வேயின் புறநகர் சேவையே துவங்கியது.

தற்போது, இவற்றில் 700 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். மேலும் மராட்டிய மாநிலத்தில் அத்தியாவசியப் பணியில் உள்ளவர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். முறையான அடையாள அட்டை, டிக்கெட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று ரயில்வே சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெறலாம் என்று நம்பப்படுகிறது.

மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே இணைந்து 450 ரயில்களை இயக்க உள்ளன. மேற்கு ரயில்வே 12 பெட்டிகள் கொண்ட 120 ரயில்களை சர்ச்கேட் முதல் தஹானு சாலை வரை இயக்குகிறது. மத்திய ரயில்வேயின் 200 ரயில்களில் மும்பை CST – தானே , கல்யான், கர்ஜாட், கசாரா வரையும், துறைமுகம், பன்வேல், சிஎஸ்டி வரை 750 ரயில்களும், இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் காலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இயங்கும் என மேற்கு ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.