மும்பை :

பெற்ற மனம் பித்து… பிள்ளை மனம் கல்லு’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, பெற்ற தாயை எப்படி இருக்கிறார் என்று எட்டிப்பார்க்காத சாப்ட்வர் இஞ்சினியரான மகன்,

தற்போது தாயை பார்க்க வந்தபோது…..  பூட்டிய வீட்டினுள் அந்த தாய் எலும்புக்கூடாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அரற்றினான்.

தந்தை மரணமடைந்துவிட்ட நிலையில், என்னால் தனியாக இருக்க முடியவில்லை… ஏதாவது முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிடு என்ற  அந்த தாயின் கடைசி நேர வேண்டுகோளையும் புறக்கணித்த அந்த மகன்…. இன்று தாயின் எலும்புக்கூடை பார்த்து கதறுவது… பார்ப்போருக்கு அவர்மீது  பரிதாபத்தை ஏற்படுத்தவில்லை மாறாக பணத்திற்கு அடிமையான அந்த அந்த நபரின் கல்லாகி போன மனசையே தோலுரித்து காட்டுகிறது.

மும்பை அந்தேரி பகுதியில் ஓஷிவாரா பகுதியில் உள்ள  ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 10வது தளத்தில் வசித்து வந்தவர் சாட்வேர் இஞ்சினியர் ரித்துராஜ் சகானியின் 63 வயதான தாய் ஆஷா.

ரித்துராஜ் படித்து, சாப்ட்வேர் உத்தியோகம் காரணமாக 1997ம் ஆண்டே அமெரிக்கா பறந்துவிட்டார். தாயும், தந்தையும் அந்த பிளாட்டில் குடியிருந்து வந்தனர். இதற்கிடையில் கடந்த 2013ம் ஆண்டு ரித்துராஜ்-ன் தந்தையும் மறைந்துவிட்டார்.

அதற்கு இந்தியா வந்து திரும்பிய ரித்துராஜ், அதன்பிறகு தாயை பார்க்கவோ பேசவோகூட  மறந்துபோனார்… பணமும், பதவி ஆசையும் அவரது மூளையை மழுங்கடிக்க பெற்ற தாய் என்பவள் ஒருவர் இருக்கிறார் என்பதையே மறந்துபோனார்….

இறுதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 7ந்தேதி அன்று தனது தாயுடன் செல்போனில் பேசியுள்ளார் ரித்துராஜ்.  வயதான அந்த தாய், தன் மகனிடம், தான் தனியாக இங்கு வசிக்க முடியவில்லை… என்னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடு என்று கெஞ்சியுள்ளார்.

தாயின் பரிதாபகரமான வார்த்தையும் கேட்டும் மனம் இரங்காத ரித்துராஜ், திடீரென நேற்று மும்பை திரும்பினார். நேராக தனது பிளாட்டுக்கு சென்ற அவர், தனது வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டியிருப்பதை அறிந்து கதவை பலமுறை தட்டினார்… ஆனால் கதவு திறக்கவே இல்லை.

இதையடுத்து, பூட்டுக்கு சாவி செய்பவலை அழைத்து, மாற்றுச்சாவி செய்து, அதன் காரணமாக வீட்டினுள் சென்றார் ரித்துராஜ்…

ஆனால், அங்கே…. அவரை தாலாட்டி சீராட்டி வளர்த்த  அம்மா இருந்தார்…. எப்படி….  டிவிக்கு எதிரே சேரில் சேலையுடன்  அமர்ந்திருந்தது எலும்புக்கூடு. தனது தாயின்  ஒரு துண்டு சதை இல்லை. புடவை கலையவில்லை. இறந்து பல மாதங்களாகிய நிலையில் உடனின் அனைத்து பாகங்களும் மக்கி போய், வெறும் எலும்புக்கூடு மட்டுமே அங்கு அவனுக்கு காட்சி அளித்தது.

ஐடி கம்பெனியில் பெரிய பதவி வகிக்கும் ரித்துராஜ் இதைக்கண்டு பேயறைந்தது போல பேச்சிழந்து நின்றான்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து அந்த பெண்ணில் எலும்புக்கூடை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயது பெண் ஒருவரின் உடல் முழுவதும் மக்கிப் போன நிலையில், எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து  ஓஷிவாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் கவில்கர் கூறுகையில்,  தனியாக வசித்து வந்த ரித்து  ராஜின் தாயார்  ஆஷா, எப்போது, எப்படி இறந்தார் என தெரியவில்லை. இது இயற்கை மரணமா, தற்கொலையா, கொலையா என்பதும் தெரியவில்லை.

ஆஷா வசித்து வந்த 10வது மாடியில் இரண்டு குடியிருப்பு மட்டுமே உள்ளது. அங்கிருந்தவர்களுக்கு அவர் இறந்தது பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை. அதே நேரத்தில்  இறந்துபோன அந்த பெண்மணியின் உடலில் இருந்து எந்தவித துர்நாற்றமும் வெளியேறவில்லை என்று கூறப்படுகிறது.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தபிறகே அவரது மரணம் குறித்து தெரிய வரும் என்று கூறினார்.

பெற்ற மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு என்ற பழமொழிக்கு ஏற்ப ரித்துராஜ் தனது வயதான தாயின் கடைசி ஆசையையைகூட நிறைவேற்ற முடியாத சுயநலமிக்க மகன் என்பது இதன்மூலம் உலகுக்கு தெரிய வந்துள்ளது.

இதுபோல பல இளைஞர்கள்  அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, வெளிநாட்டு மோகத்தில்  தம்மை பெற்று வளர்த்து ஆளாக்கி படிக்க வைக்கும் எத்தனையோ பெற்றோரை தவிக்கவிட்டு, அவர்கள் அங்கே சொகுசாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களை போன்றோருக்கு இந்த தாயின் மரணம் ஒரு எடுத்துக்காட்டு…..