மும்பை : இத்தாலிப் பெண்ணை டாக்சியில் பலாத்காரம் செய்த வழிகாட்டி

மும்பை

மும்பைக்கு சுற்றுப்பயணம் வந்த ஒரு இத்தாலிப் பெண்ணை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் டாக்சியில் பலாத்காரம் செய்துள்ளார்.

இத்தாலியை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார்.  தனியாக வந்துள்ள இவர் மும்பை நகரை சுற்றிப் பார்க்க ஒரு சுற்றுலாப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.  அப்போது அவரிடம் ஒரு வாலிபர் தம்மை சுற்றுலா வழிகாட்டி என அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளார்.   அவரை இந்தப் பெண் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு பேருந்தில் பயணம்  செய்துள்ளார்.

பயணம் முடிந்ததும் அவரை ஒரு டாக்சியில் ஏற்றிச் சென்ற வழிகாட்டி அவருக்கு அமிதாப் பச்சன் இல்லத்தை காட்டுவதாக கூறி ஜூஹு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.   அதன் பிறகு அந்த இத்தாலிப் பெண்ணை அவர் தங்கி உள்ள ஓட்டலில் விட்டு விடுவதாகக் கூறி உள்ளார்.  செல்லும் வழியில் அந்த இளைஞர் மதுபானம் வாங்கி உள்ளார்.

அந்தப் பெண்ணை வற்புறுத்தி மது அருந்த வைத்துள்ளார்.   பிறகு மது போதையில் இருந்த அந்தப் பெண்ணை டாக்சியில் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அந்தப் பெண் மும்பை கொலாபா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   அதன் பிறகு அந்தப் புகார் பலாத்காரம் நடந்ததாக சொல்லப்படும் ஜுஹு பகுதி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.   அந்தப் பெண் குறிப்பிட்ட சுற்றுலா வழிகாட்டியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.