மும்பை:

உலக வங்கியின் நிதியுடன் மும்பை நகர மின்சார ரெயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதியுடன் மாற்றி அமைக்கப்படவுள்ளது.

மும்பை நகர்புற போக்குவரத்து திட்டத்தின் கீழ் மேற்கு மற்றும் மத்திய ரெயில்வே ஏற்கனவே இதற்கான ரெயில் பெட்டிகளை வாங்கும் பணி தொடங்கிவிட்டது. 210 பெட்டிகளுக்கு கொள்முதல் ஆணை கொடுத்துவிட்டது. ரூ. 60 கோடி மதிப்புக் கொண்ட ஒரு ஏசி ரெயில் பெட்டி 25 ஆண்டுகள் ஆயுட் காலம் கொண்டதாகும். தற்போது 245 ரெயில்கள் மும்பையின் நகரப் பகுதிகளில் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வருகிறது.

இந்த திட்டத்திற்கான நிதியுதவியை உலக வங்கி ஏற்கனவே அளித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக ரெயில் பெட்டிகள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ரெயில் ஓடும் போது கதவுகள் தாமாக மூடப்பட வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், மும்பை ரெயில்களில் பெரும்பாலான நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் கதவுகளை மூ டுவது சாத்தியமாகாது. இது போன்று சில தொய்வுகள் காரணமாக திட்டத்தில் இழுபறி நீடிக்கிறது. எனினும் இது சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.