மும்பை

மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சஞ்சய் தேஷ்முக், தேர்வு முடிவுகளை ஜூலை 31க்குள் வெளியிடாவிட்டால் பதவி நீக்கம் செய்யப்படலாம் என ஒரு செய்தி தெரிவிக்கிறது.

மும்பை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2 ஆண்டுகளாக பணி புரிபவர் சஞ்சய் தேஷ்முக் (வயது 52).  மும்பை பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டின் இறுதியில் நடத்திய தேர்வின் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மகாராஷ்டிரா மாநில பல்கலைக்கழக விதிகளின் படி தேர்வு முடிந்த 45 நாட்களுக்குள் முடிவை அறிவிக்க வேண்டும்.  அதன்படி ஜூலை 4ஆம் தேதிக்குள் முடிவை அறிவித்திருக்க வேண்டும்.  ஆனால் தாமதமாகி வருகிறது  இதனால் .  மகாராஷ்டிரா மாநில கவர்னரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான வித்யாசாகர் ராவ் இந்த மாத இறுதிக்குள் முடிவு வெளியாக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் சரியான நேரத்தில் வெளியாகததால் வெளி மாநிலத்துக்கு மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.  இன்னும் 6 லட்சம் பேப்பர்கள் திருத்தப்படாத நிலையில் அந்த தேதிக்குள் முடிவு அறிவிப்பது மிகவும் கடினம் என தெரிய வருகிறது.  ஜூலை 31க்குள் முடிவு அறிவிக்கப்பட வேண்டும் என மாணவர்களும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

தற்போது 31ஆம் தேதிக்குள் தேர்வு முடிவை அறிவிக்க முடியவில்லை என்றால் துணை வேந்தர் அவராகவே பதவி விலக வேண்டும் என பலரும் கூறுகின்றனர்.   அவர் பதவி விலகினால் கவுரவமாக போகும் எனவும் இல்லையெனில் அவர் நீக்கப்பட்டால் அது அவருக்குத்தான் அவமானம் எனவும் மும்பையை சேர்ந்த உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் தெரிவித்துள்ளார்.