திடீர் பிரசவ வலி: மும்பை தாதர் ரயில் நிலையத்தில் அழகான குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்

மும்பை:

திடீர் பிரசவம் வலி ஏற்பட்டதன் காரணமாக,  மும்பை தாதர் ரயில் நிலையத்தில்  இளம்பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார். இது பரபரப்பாக பேசப்படுகிறது.

சம்பவத்தன்று மும்பை தாதர் ரயில் நிலையத்திற்கு 21வயதுடைய கர்ப்பிணி  பெண் ஒருவர், புனே செல்வதற்காக வந்திருந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர், ரயில் நிலைய பிளாட்பாரங்களில் ஏறி இறங்கி வந்ததால், திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே அமர்ந்து விட்டார்.

இதுகுறித்து, அவரது கணவர் உடனடியாக அருகிலுள்ள பெண்களிடமும், மருத்துவ குழுவினருக்கும் தகவல் அளித்தார். அதைத்தொடர்ந்து சக பெண் பயணிகள் மற்றும் மருத்துவ குழுவினர் பாதுகாப்போடு அந்த இளம் பெண் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.

அதையடுத்து, பிறந்த குழந்தையும் தாயும் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது  சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

24 மணி நேரமும் பரபரப்போடு காணப்படும் தாதர் ரயில் நிலையத்தில் இளம்பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணையில், குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் பெயர் கீதா தீபக் வாக்ரே என்பது தெரிய வந்துள்ளது.