மும்பை

ணவரைக் கடத்தியவர்களைப் பிடிக்க ஒரு மும்பை பெண் போலீசாருக்கு உதவி உள்ளார்.

மும்பையை சேர்ந்த கெமிக்கல் வர்த்தகர் பவின் ஷா என்பவர்.  இவர் கடந்த  செவ்வாய்க்கிழமை அன்று ராம் மந்திர் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது அவரிடம் வியாபாரம் பேச வேண்டும் என ஒருவர் அவரை அழைத்துச் சென்றார்.   சிறிது தூரம் சென்றதும், மேலும் சிலர் அங்கு வந்து அவரைத் துப்பாக்கியை காட்டி அழைத்துச் சென்றுள்ளனர்.   அவரை ஒரு காரில் கட்டிப்போட்டு நல்லசோபாரா என்னும் இடத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அடைத்து வைத்துள்ளனர்.

அங்கு பவின் ஷா உடைகள் களையப்பட்டு கட்டிப்போடப்பட்டு அடித்து உதைக்கப்பட்டுள்ளார்.   இது மூன்று தினங்களுக்கு தொடர்ந்துள்ளது.  இந்த கொடுமையை வீடியோ படமாக்கப்பட்டு பவின் ஷா மனைவியின் ஹிதல் ஷாவுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பபட்டுள்ளது.   அவரிடம் கணவரை திருப்பி அனுப்ப ரூ.82 லட்சம் பணம் கேட்கப்பட்டுள்ளது.  அத்துடன் இன்றி அவர் பணம் தராவிட்டால்,  பவின் ஷாவின் எட்டு வயது மகனுக்கோ, அல்லது அவர் தந்தைக்கோ ஆபத்து ஏற்படுத்தப் படும் என மிரட்டல்காரர்கள் தெரிவித்தனர்.

போலீசாரின் உதவியை ஹிதல் ஷா நாடி உள்ளார்.  அவர்கள் ஆலோசனைப்படி கடத்தல்காரர்களிடம் பேரம் பேசி ரூ. 10 லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.   அவர்கள் தெரிவித்தபடி அந்தேரி ரெயில் நிலையத்தில் இருந்து கிளம்பி நல்லசோபராவுக்கு இரவு 11 மணிக்கு போய் சேர்ந்துள்ளார்.   ஹீதலை போலீசார் பின் தொடரவில்லை என்பதை உறுதி செய்துக் கொள்ள அவரை மாறி மாறி பல இடங்களுக்கு செல்லுமாறு கூறி இறுதியாக நல்லசோபராவுக்கு வரவழைத்துள்ளனர்.

அங்கு கடத்தல்காரர்களில் இருவர் ஹீதலை நெருங்கியதும்  அவரை பின் தொடர்ந்த போலீசார் இருவரையும் பிடித்துள்ளனர்.  பிறகு அவர்களின் தகவலின் படி பவின் ஷா அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று அவரை மீட்டதுடன்,  கடத்தல்காரர்களையும் போலீசார் கைது செய்துளனர்.   போலீசாருக்கு தைரியமாக உதவி செய்த ஹீதல் ஷாவை பாராட்டி உள்ளனர்.   கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, குண்டுகள், மற்றும் கடத்த உபயோகப்படுத்திய கார் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 13ஆம் தேதி வரை போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.