மும்பை: வரும் 27ம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் 24 மணி நேரமும், 365 நாட்களும் வணிக வளாகங்களும், உணவகங்களும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. கூட்டத்தின் முக்கிய அதிகாரிகள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

முதல்கட்டமாக இதுபோன்ற அனுமதியை 25 வணிகவளாகங்களுக்கு தரலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல ஓட்டல்கள், கடைகள் உள்ளிட்டவைகளும்  திறந்திருக்கும்.

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் பிரவீண் பர்தேஷி கூறி இருப்பதாவது: 24 மணிநேரமும் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் திறக்க நாங்கள் அனுமதி அளித்து இருக்கிறோம். வரும் 27ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது.

பாதுகாக்கப்பட்ட குடியிருப்புகள், பொழுதுபோக்கு நிறைந்த பகுதிகளில் இருக்கும் உணவு வளாகங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தீயணைப்பு வசதிகள், முன் எச்சரிக்கையான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறோம் என்று கூறினார்.