சென்னை:
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு 2 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் இன்று மேலும் 138 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 906 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகர எல்லைக்குள் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மே 2-ஆம் தேதிக்குள் பள்ளிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநகரட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுமட்டுமின்றி சென்னையில் 98 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு இருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

கொரோனா தொற்று குறித்து கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், மற்றவர்கள் பணிக்கு வர அச்சப்படும் சூழலில் இதற்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யப்பட்டுள்ளது என்றும் வின் நியூஸ் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வி எழுப்பினார், இதற்கு பதில் அளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி பகுதியில் 98 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் முன்களத்தில் பணியாற்றுவோருக்கு உலகத்தின் பல நாடுகளிலும் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்றாக வேறு பணியாளர்கள் அப்பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.