செப்டம்பர் 15 ஆம் தேதி திருப்பூரில் விஜயகாந்த் தலைமையில்  முப்பெரும் விழா

சென்னை

அடுத்த மாதம் 15 ஆம் தேதி திருப்பூரில் விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ் கதாநாயக நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது 67 ஆம் வயது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். கடந்த 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி பிறந்த விஜயகாந்த் கடந்த 1979 ஆம் ஆண்டில் இனிக்கும் இளமை என்னும் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதன்பிறகு சட்டம் ஒரு இருட்டறை என்னும் படத்தின் மூலம் முன்னணி நிலைக்கு உயர்ந்தார். அதன் பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்துப் புகழடைந்தார்.

விஜயகாந்த் அவர் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்துக்குப் பிறகு கேப்டன் என  அழைக்கப்பட்டார். ரசிகர்களுக்குப் பல நலத்திட்டங்களைச் செய்து வந்த அவர் தேமுதிக என்னும் கட்சியைத் தொடங்கி அரசியலில் நுழைந்தார். இதற்கு முந்தைய சட்டப் பேரவையில் அவர் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இன்று அவரது கட்சியின் தலைமைச் செயலகத்தில் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்த நாள் விழாவில் பள்ளிக்  குழந்தைகள் விஜயகாந்த்துக்கு இனிப்புக்களை ஊட்டி விட்டனர். தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் சுதீஷ் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் விஜயகாந்த் ஒரு மக்கள் நலத் திட்டத்தைத் தொடங்கி வருவதாகத் தெரிவித்தார். பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகவும் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று விஜயகாந்த் தலைமையில் திருப்பூரில் முப்பெரும் விழா நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.