ரஜினி கட்டுரை: முரசொலி விளக்கம்

டிகர் ரஜினிகாந்த் குறித்து வெளியான கட்டுரை குறித்து தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழில் விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 23-ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்று தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த அறிக்கை குறித்து அவரும், அவரது ரசிகரும் உரையாடுவது போன்ற உரையாடல் ஒன்று கடந்த 26-ஆம் தேதி முரசொலி நாளிதழில் வெளியானது. ரஜினியின் அறிக்கை தொடர்பாக அவரது ரசிகர் பல்வேறு கேள்விகளை எழுப்புவது போன்று கட்டுரை எழுதப்பட்டிருந்தது. ரஜினி மட்டும் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படலாம், அவரது ரசிகர்கள் ஆசைப்படக் கூடாதா என அக்கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

முரசொலி கட்டுரை

இந்தக் கட்டுரை வெளியான அன்றே அதற்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட ரஜினி, தன்னையும் தனது ரசிகர்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முரசொலியில் வெளியான கட்டுரை குறித்து அதன் ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

முரசொலி விளக்கம்

அந்த விளக்கத்தில் ரஜினி குறித்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவது போல் உள்ளதென்று தங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதாகவும், இனி அத்தகைய செய்திகளை வெளியிடும் போது கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.