சென்னை: முரசொலி அலுவலகம் மீது புகார் கொடுத்த பாஜக பிரமுகர் சீனிவாசன் கால அவகாசம் கேட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார்.
திமுகவின் முரசொலி அலுவலகத்துக்காக பஞ்சமி நிலங்கள் வளைக்கப்பட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது பெரும் புயலை கிளப்பியது.


பாஜக பிரமுகர் சீனிவாசன் என்பவர், தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகுமாறு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி, அவருக்கு பதில் முரசொலி அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் ஆஜரானார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: ஆணையத்தில் அனைத்து ஆவணங்களையும், ஆதாரங்களையும் காட்டியிருக்கிறோம். ஆனால், புகார் கொடுத்த பாஜக பிரமுகர் சீனிவாசனும், தலைமை செயலாளரும் மேலும் கால அவகாசம் கேட்டுள்ளனர்.


எங்களை பொறுத்தவரை, இன்றே இந்த வழக்கு முடிந்துவிட்டதாக நினைக்கிறோம். ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக இதுபோன்று அவதூறு பரப்புகின்றனர். இது தொடர்பாக புகார் கொடுத்தவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளோம் என்று கூறினார்.