சென்னை:

முரசொலி  பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்கு நேரில் ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தனுஷின் அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின்,  பஞ்சமி நிலம் தொடர்பாக கருத்து தெரிவிக்க,  பாமக தலைவர் ராமதாஸ், அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஸ்டாலின் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!’ என டிவிட் போட்டு பிரச்சினையை உருவாக்கினார்.

இதையடுத்து, திமுக தரப்பில் இருந்து முரசொலி அலுவலகம் பட்டா நிலம் என்றும், அது பஞ்சமி நிலம் அல்ல என்றும்  பட்டா வெளியிடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் புகாரளித்தார். இதுதொடர்பான விசாரணையின்போது, திமுக அமைப்புச் செயலாள ரும், எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி ஆதராங்களை சமர்ப்பித்தார்.

இந்த நிலையில், பஞ்சமி நிலம் தொடர்பாக  திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று  தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஜனவரி 7-ம் தேதி மு.க.ஸ்டாலின்  ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முரசொலி பிரச்சினையில் கட்சித் தலைவர் எம்.கே.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பிய செய்தி பிரச்சினையைத் திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டது என்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும்  தெரிவித்து உள்ளார்.