“முரசொலி சொத்து விவகாரம்”:

ஆப்பசைத்த  குரங்கு கதையாக பா.ம.க.வும், பா.ஜா.கவும் திணறல்!

-சிறப்பு நிருபர்-

‘முரசொலி நாளிதழ் அமைந்துள்ள நிலம் தொடர்பாக, தி.மு.க-பா.ம.க இடையே, ரொம்ப காலமாக மோதல் இருந்து வருகிறது ! சமீபத்தில், அது மீண்டும் புதிய வேகம் எடுத்துள்ளது !

நடிகர் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தைப் பார்த்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அதில் இடம் பெற்றிருந்த ‘பஞ்சமி’ நிலம் மீட்புப் போராட்டம் குறித்து பாராட்டி, ‘டிவிட்டரில்’ ஒரு பதிவு போட்டார் !

அதை விமர்சித்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘முரசொலி’ அமைந்துள்ள இடமே, ‘பஞ்சமி’ நிலம்தான் ” என்று, குற்றம் சாட்டினார் !

டாக்டர் ராமதாசின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “முரசொலி ” அமைந்துள்ள இடம் ‘பஞ்சமி’ நிலம் என நிரூபித்தால், அரசியலைவிட்டு விலகுகிறேன். ‘இல்லை’ எனில், ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத் தயாரா? ” என்று, எதிர் சவால் விட்டார் !

மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் இடையே துவங்கிய  இந்த மோதலில், பா.ஜ.க. மூக்கை நுழைத்தது ! பா.ஜ.க. வின் தமிழ் மாநில செயலாளர் ஆர். சீனிவாசனும் பா.ஜ.க. பிரமுகர் ‘தடா’ பெரியசாமியும், இந்தப் பிரச்சனையை, தேசிய எஸ்.சி ஆணையத்திற்கு கொண்டு சென்று, புகார் கொடுத்தனர் ! அதன் அடிப்படையில், தேசிய எஸ்.சி. ஆணையம், விசாரணை நடத்தியது !

இது தொடர்பாக பதிலளித்த தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “பாட்டாளிகளுக்காக கட்சி தொடங்கி, வன்னியர் சங்க அறக்கட்டளையை தன் பெயருக்கே மாற்றிக் கொண்டது போன்ற விவகாரம், ‘முரசொலி’ அலுவலக விவகாரம் என்று, டாக்டர் ராமதாஸ் நினைத்து விட்டாரா? ‘முரசொலி’ அலுவலகம் அமைந்துள்ள இடம் ‘பஞ்சமி’ நிலம் என்பதற்கான ஆதாரங்களை வெளியிடுமாறு தி.மு.க. தலைவர் விடுத்த சவாலுக்கு , இதுவரை பதில் இல்லையே, ஏன்? ”
என்று, டாக்டர் ராமதாசை மடக்கினார், டி.கே.எஸ். இளங்கோவன் !

இப்படி, ‘முரசொலி’ அலுவலகம் அமைந்துள்ள சொத்து தொடர்பாக, காரசாரமாக அறிக்கைப் போர் நடந்து வருகிற நிலையில், ‘முரசொலி’ சொத்து விவகாரத்திற்குள் புதைந்துள்ள உண்மைத் தன்மையை அறிய முயன்றோம் ! அப்போது நமக்குக் கிடைத்த தகவல்கள் :

1. ‘முரசொலி’ அலுவலகம் இப்போது அமைந்துள்ள [ 12 கிரவுண்டு 1825 சதுர அடி ] இடத்தில், தமிழக அரசின் ஹரிஜன் வெல்பேர் போர்டின் கீழ், பட்டியலின மாணவர்கள் தங்கும் விடுதியாக இருந்தது உண்மை !

ஹரிஜன் வெல்பேர் போர்டு, அந்தக் கட்டிடத்தில் வாடகைக்குத்தான் இருந்தது ! ஹரிஜன் வெல்பேர் போர்டு யாருக்கு வாடகை செலுத்தியது என்றால்,  RENT CONTROL  அமைப்புக்கு, வாடகை செலுத்தியது !

2. RENT CONTROL அமைப்பு என்பது, நில உரிமையாளருக்கும் , வாடகை தாரருக்கும் இடையில் மோதல் நிலவாமல் இருக்க வேண்டி, சில ஒழுங்கு முறைகளை வகுத்து , ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கப்பட்ட மதியஸ்த அமைப்பே,Rent Control
அமைப்பு ஆகும் !

வாடகைக் கட்டுபாட்டு சட்டத்தை நிறைவேற்ற தனி அதிகாரங்கள் கொண்ட அமைப்பு எல்லா மாநிலங்களிலும்உள்ளது.

வாடகைக் கட்டுபாட்டுச் சட்டம், அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. சமீபத்தில்,
தமிழக அரசு Rent Control Act ஐ திருத்தி அமைத்துள்ளது !

வாடகைக் கட்டுபாட்டுச் சட்டம் -1960 நடைமுறையில் இருந்த கால கட்டத்தில்தான், ஹரிஜன் வெல்பேர் போர்டு, வாடகைக்குப் பெற்றிருந்த (முரசொலி தற்போது அமைந்துள்ள இடம்) பழைய கட்டிடத்திலிருந்து வெளியேறுகிறது !

அதன் காரணமாக, இப்போது ‘முரசொலி’ அலுவலகம் அமைந்துள்ள இடம், ஒரிஜினல் நில உரிமையாளருகே போய்ச் சேருகிறது !

அவர், அந்தச் சொத்தினை, யாருக்கும் விற்கும் அல்லது வாடகைக்கு விடும் அதிகாரம் பெற்று, பூரண உரிமையாளர்  ஆகிறார் !

அவர், ‘முரசொலி’க்கு 1973 வாக்கில், அந்த சொத்தினை, ‘முரசொலி’க்கு விற்றுவிட்டார் ! ‘முரசொலி’ அண்ணா சாலையிலிருந்து, இடம் பெயர்ந்து, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், விஸ்தாரமானது !

3. “ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் இங்கே ஒரு மாணவர் விடுதி இருந்ததே, அது எங்கே ?” என்று, அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எதிராக, எதிர்க்கட்சி களால், மேடைகளில் கேள்வி எழுப்பப்பட்டது !

4. ஆதிதிராவிடர் மாணவர்களின் தங்கும் விடுதியை கருணாநிதி ‘கபளீகரம்’ செய்துவிட்டார் என்று, பலரும் மேடைகளில் பேசினார்கள்! அதெல்லாம் உண்மையல்ல என்று, அப்போதே அந்தக் கேள்வி, பிசுபிசுத்துப் போனது !

அந்த சொத்தின் ஒரிஜினல் உரிமையாளருக்கும், அதில் வாடகைதாரராக இருந்த ஆதிதிராவிடர் நலத்துறைக்கும் இடையில் வழக்கு எழுந்து, அதை விசாரித்த வாடகைக் கட்டுப்பாட்டு கோர்ட், நில உரிமையாளருக்கு ஆதரவாக உத்தரவு போடுகிறது !  அவர்,  1973- வாக்கில் ‘முரசொலி’க்கு கிரயம் செய்து கொடுத்தார் !

இந்த விவரம் தெரியாத அப்போதைய எதிர்க்கட்சிகள், இப்போதுள்ள பிஜேபி, பாமக போலவே, கருணாநிதிக்கு எதிராக குற்றம் சாத்திவிட்டு, காணாமல் போனார்கள் !

5. தமிழக அரசின் அங்கமான வாடகைக் கட்டுபாட்டு அமைப்பு அல்லது அலுவலகம், ‘பஞ்சமி’ நிலங்களைக் கையாளும் வாய்ப்பே இல்லை !  எனவே, ‘முரசொலி’ அலுவலகத்திற்காக  அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, ‘பஞ்சமி’ நிலத்தை மடக்கிப் போட்டுக் கொண்டார் என்ற குற்றச்சாட்டில்  பசையே இல்லை !

6. ‘முரசொலி’
அலுவலகம்
அமைந்துள்ள இடம்,
‘பஞ்சமி’ நிலம் என்று,
இப்போது டாக்டர் ராமதாஸ்,
‘தடா’ பெரியசாமி, பி.ஜே.பி. மாநில
செயலாளர்
ஆர். சீனிவாசன் எல்லாம் குற்றம்
சாட்டுகிறார்கள் !

இது தொடர்பாக, புகார் வாசிக்கும் பி.ஜே.பி. – மாநில செயலாளர் புரபசர் சீனிவாசன்
சொல்கிறார் :

” ‘முரசொலி’ அலுவலகம், ‘பஞ்சமி’ நிலத்தில் கட்டப்பட்டது என்று, நாங்கள் சொல்லவில்லை. அது தொடர்பான சந்தேகத்தை, தி.மு.க. தெளிவுபடுத்த வேண்டும்” என்றுதான் கேட்கிறோம்” என்று தெளிவாக சொல்கிறார் !

7. ஒருவர் மீது புகார் அளித்தால், இந்திய சாட்சியங்கள் சட்டப்படி, ஆதாரம் அவசியம் இருக்க வேண்டும்.

இந்த அடிப்படை விவரம்கூட தெரியாதவர்கள் அல்ல, பி.ஜே.பி செயலாளர், புரபசர்  ஆர். சீனிவாசனும், ‘தடா’ பெரியசாமியும் !

டாக்டர் ராமதாஸ், பி.ஜே.பி தலைமையை குஷிப்படுத்தி, அதன் மூலம் மகன் அன்புமணி தலை மீது மிரட்டலுடன் தொங்கும் கத்தியான சி.பி.ஐ. வழக்கிலிருந்து விடுபட வைக்க முயற்சிக்கிறார் !

டாக்டர்  ராமதாசுக்கு, பி.ஜே.பி. சீனிவாசனும், ‘தடா’ பெரியசாமியும் ‘ஜால்ரா’ போடுகிறார்கள் !

சென்னை சாஸ்திரி பவனில் செயல்படும் ஒரு ஆணையம், மத்திய அரசுக்கு தொடர்புடையது ! ஆதாரம் ஏதும் இல்லாமலும், ஒருவர் இன்னொருவர் மீது முகாந்திரம் இல்லாமலும் புகார் கொடுப்பதும்; அதை ஏற்று,  ‘முரசொலி’  நிர்வாகத்தை,
ஆணையம் ஒன்று விசாரிப்பதும்… தி.மு.க தலைமையை, பி.ஜே.பி. தலைமை மிரட்டிப் பார்க்கும் கீழான நடவடிக்கையாகும் !

● தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை மடக்க முயன்ற பா.ம.க.வும், பா.ஜ.க.வும்,  இந்தப் பிரச்னையில்,
‘ஆப்பசைத்த குரங்கு’ கதையாக திணறப்போவது, நிச்சயம் !