ஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கொலைவெறி தாக்குதல்..

--

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கையை சார்ந்தவர் கே.பஞ்சவர்ணம் (வயது 80). இவர் கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வீட்டு சமையல்காரராக சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் பணியாற்றியவர். இவரது மகன் ப.முருகேசன் இவர், ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தற்போது இவர் செய்தி தொடர்புத்துறை உதவிஇயக்குனராக பணியாற்றுகிறார்.

பஞ்சவர்ணத்துக்கு ஜெயலிலிதா மீது மிகுந்த மதிப்பு மரியாதை உண்டு. இவரது பேரனுக்கு பெயர் சூட்டியதே  ஜெயலலிதா தான்.

தற்போது சென்னையிலேயே தனது மகந் வீட்டில் இருக்கிறார் பஞ்சவர்ணம். இன்று அதிகாலை பஞ்சவர்ணம் நடைபயிற்சி செய்து விட்டு, தனது மகன் முருகேசன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து  பயங்கர ஆயுதங்களால் தாக்கியது.  வலியில் பஞ்சவர்ணம்  அலறினார். அவரது சத்தத்தை கேட்ட அவரது மகன் முருகேசன் தந்தையை காப்பாற்ற முயன்றார். அவரை மர்ம கும்பலைச் சேர்ந்த 3 பேர்கள் பிடித்துக் கொண்டனர். இரண்டு பேர்கள் பஞ்சவர்ணத்தை சரமாரியாக தலையில் வெட்டினர். பிறகு , 5 பேர் கொண்ட கும்பல் தப்பிச் சென்றது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பஞ்சவர்ணத்தை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பஞ்சவர்ணத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பஞ்சவர்ணத்தின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்நிலையத்தில் அவரது மகன் முருகேன் புகார் அளித்துள்ளாராம். ஆனால், சைதாபேட்டை காவல்நிலையத்தில் புகார் மனுவை காவலர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். 

பிறகு, உதவி ஆணையாளரிடம் புகார் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவல் புரிந்துவந்தவர் கொலை செய்யப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் பணிபுரந்த முதியவர் தாக்கப்பட்டிருப்பதும், இது குறித்த புகாரை காவல்துறையினர் வாங்க மறுப்பதும் பலவித அதிர்ச்சிகரமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.