“முறிவு” – கவிதை

 

முறிவு

 

கவிதை

பா.தேவிமயில் குமார்

 

 

பிரியமான

பொழுதுகளை

பிரித்து விட்டோம்

நாமே, நம்மிடமிருந்து!

 

காதலின் கனவுகள்

களவு போனது-என்

கண்களை விட்டு-நீ

விலகிய போது!

 

ஓரு காலத்தில்

உனக்காக உறவுகளை

உதறி விட்டு வந்தேன்-இன்றோ

நீயும்  உதறினாய்!

 

இருண்ட கார்

இந்த கூந்தலென்றாய்-அன்று

இரண்டிலொன்று

பார்த்திடலாம் என்கிறாய் இன்று!

 

என்றென்றும் நீ

எனக்கானவள் என்றாய்,

இன்றோ…

என்றுமே என்னை வேண்டாமென்றாய்

 

விடியும் பொழுதாய்

உன்னோடிருந்தேன் அன்று

விடியாத இரவுகளோடு

தனிமையிலுள்ளேன் இன்று!

 

வாழ்வைப் பரிமாற

வாவென்றாய் அன்று,

இன்றோ தூக்கியெறிந்தாய்

எச்சில் பட்ட இலையாய்!

 

ஏழடி சேர்ந்து நடந்தாலே

நண்பர்களாம்… ஆனால்

ஏழாயிரம் அடிகள் சேர்ந்தே நடந்தோம் !

ஏன், நாம் பிரிகிறோம் ?

 

நமக்கான காதல்

பதவுகள் ஏராளம், அதைப்

பறித்திட   சட்டத்தை

நாடுவது ஏன்?

 

வாழ்க்கை ஓப்பந்தந்தை

வாசிக்கத் தவறியவனே !

சந்தர்ப்பங்களை

சாட்சியாக நிறுத்தாதே!

 

பிரிவதென

முடிவான பின்

வார்த்தைத் தாக்குதல்

வேண்டாமடா!

 

“வாழாவெட்டி” பட்டத்தை

வாங்கித் தருபவனே,

படித்த பட்டங்களோடு

இனி…

இதையும் நான் சுமக்கவேண்டுமடா

 

என் வேலியென

இருப்பாயென நினைத்தேன், ஆனால்

உன் “தாலியை” சுமந்திட, நீ

வேறு ஒரு “ஏமாளியை”த் தேடுகிறாய்

 

சீதையை, பூமாதேவி அணைத்ததும்,

சகுந்தலையை வேதனைத் துரத்தியதும்,

பிரிவால் என்பது இப்போது

புரிகிறதடா ! உன்னாலே !

 

ஆனாலும் ………

திருமண நிழற்படத்தை

நிஜமாக்கிட

நினைக்கிறேன், உன்னோடு

மீண்டும் ஓருமுறை!

 

நீயோ ….

நீண்ட பயணத்திற்கு

இன்னொரு

இளையவளிடம்

வாழ்வைப் பகிரலாம்  

வா  என  அழைக்கிறாய்!

 

உன் நினைவுகளோடு

உடலால் மட்டுமே

வாழ்கிறேன்!

உண்மையில்  உயிர்

எங்கென்று அறியேன்!

 

துணை நின்றவனே  உன்

இரண்டாம் துணையை

இதுபோல காதல்

இரங்கற்பா எழுத வைத்திடாதே!

 

என்றாவது ஒரு நாள்

என்னை நீ நினைக்கும் போது

கண்ணில் நீர் வரும் ஆனால்

காலம் கடந்திருக்குமே ! அன்று

 

மண முறிவுகள் 

முறிந்து போகட்டும்-நம்

இருவரோடும் இந்த உலகில்

இறுதியாய்!

– பா.தேவிமயில் குமார்