சென்னை:

ட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு சங்கீத வித்வான் என்றால் கேவலமா? காமாலைக்காரன் ஸ்டாலின்…என  அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில்,  2019-2020 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தமிழக   நிதியமைச்சரும், துணை முதல்வருமான  ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 86 பக்கங்கள் கொண்ட இந்த பட்ஜெட் புத்தகத்தை 2 மணி 38 நிமிடங்களில் வாசித்து முடித்தார். அதைத் தொடர்ந்து சபை ஒத்தி வைக்கப்பட்டது.

பட்ஜெட் குறித்து விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துணைமுதல்வர் ஓபிஎஸ் சங்கீத வித்வான் போல சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னார் என்றும், உதவாக்கரை பட்ஜெட் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  சங்கீத வித்வான் என்றால் கேவலமா?.. ஞானம் பெற்றவர்கள் என அர்த்தம் என்று கூறியவர்,  நல்ல கண்கள் உடையவர்களுக்கு நல்லவிதமாக தெரியும், காமாலைக்காரர்கள் கண்களுக்கு எப்படி தெரியும்? என்று பதில் அளித்தார்.

தமிழக பட்ஜெட்டின் மூலம் தமிழக மக்களின் காதுகளுக்கு இனிமையான ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் ஓபிஎஸ் என்பதை மறைமுகமாக சங்கீத வித்வான் என கூறிய ஸ்டாலி னுக்கு நன்றி. மிகவும் இனிப்பான பட்ஜெட் இது. மீனவர்கள், எளியவர்கள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்டி, எஸ்சி பிரிவினர் என அனைத்து தரப்பினருக்கும் நல்ல திட்டங்களை வழங்கும் திட்டமாகவே இந்த பட்ஜெட் உள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஸ்டாலின் சொல்வது போல் ஏட்டுச் சுரக்காய் அல்ல. இந்த பட்ஜெட் எல்லோருக்கும் உதவக் கூடிய நாட்டு சுரக்காய். சங்கீத வித்வான் என்றால் கேவலமா என்ன என்று கேள்வி எழுப்பியவர், அவர்கள் ஞானம் பெற்றவர்கள். அதாவது “ச, ரி, க, ம, ப, த நி, ச” ஆகிய 7 ஸ்வரங்கள் குறித்து அறியாத ஸ்டாலின் சங்கீதம் குறித்து பேசவே கூடாது என்றார்.

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட  ரூ 5000 கோடி குறைவு என்பது நல்ல கண்கள் உடையவர்களுக்கு நல்ல விதமாக தெரியும், காமாலைக்காரர்கள் கண்களுக்கு எப்படி தெரியும்? புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கியது ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லையா? என்று விமர்சித்தவர்,  பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது தமிழக பட்ஜெட். மாநில வருவாய் பற்றாக்குறை ரூ. 5000 குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.