பாடவா இசைநிலவே…!

நெட்டிசன்: 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …… மெல்போர்ன் …. ஆஸ்திரேலியா 

பாடும் நிலவாகப் பவனிவந்தாய் பாலுவே

பாடல்தர விரைவாக வந்திடுவாய் பாலுவே

ஆடிவரும் தென்றலிலும் ஐயாவுன் குரலிருக்கு

அழகான சிரிப்புடனே பாடவா இசைநிலவே

 

உன்னிசைக் கேட்பதற்கு உலகமே காத்திருக்கு

உணர்வுடனே உந்தனிசை ஒட்டியே இருக்குதையா

செந்தமிழை உச்சரித்து சிறப்பாகப் பாடிடுவாய்

வந்திருந்து பாடுதற்கு வாபாலு விரைவாக

 

இளையராஜா இசைபெருக என்றுமே துணையானாய்

ஏஆர் ரகுமானின் இசைக் கோலம் உட்புகுந்தாய்

விஸ்வநாதன் இசையினிலும் வெற்றிக்கொடி பறக்கவிட்டாய்

விரைவாக ஓடிவா வெள்ளித்திரை காத்திருக்கு

 

ரிஎம் எஸ் பின்னாலே யார்வருவருவார் பாடவென

காத்திருக்க வைக்காமல் கலக்கலுடன் வந்துநின்றாய்

உன்வரவால் திரையிசைக்கு உத்வேகம் பிறந்ததையா

எழுந்தோடி வந்திடுவாய் எங்கள்பாலு பாடுதற்கு

  

சுந்தரத் தெலுங்கானாலும் சொக்கவைத்தாய் தமிழிசையை

மந்திரமாய் உந்தனிசை மயக்குதையா கடவுளையே

சொந்தமுடன் எல்லோரும் கொண்டாடும் இசைமன்னா

சுகம்பெற்று எழுந்துவர இறைவனிடம் வேண்டுகிறோம்

 

பாலுநீ பாடவேண்டும் பலபேரும் மகிழவேண்டும்

தாள லயத்துடனே தரவேண்டும் தமிழிசையை

 
வாழவைக்கும் இசைதந்தாய் வாழ்ந்திடுவாய் பாலுவையா             
 
ஆழநிறை அன்புடனே அழைக்கின்றோம் வந்திடையா…!
++++