புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே முஸ்லிம் மாவட்ட கவுன்சிலர் ஒருவர் மாரியம்மன் கோயிலை சுற்றி பக்தர்கள் வசதிக்காக பாதை அமைத்து கொடுத்துள்ளது,  வரவேற்பை பெற்றுள்ளது.

மணல்மேல்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பல ஆண்டுகளாக, பூசாரியாக இருப்பவர் சிதம்பரம். 77 வயதான அவருக்கு நீண்டகாலமாக ஒரு கோரிக்கை இருந்து வந்தது. பக்தர்களுக்காக கோயிலை சுற்றி ஒரு பாதை அமைக்க வேண்டும் என்று பலரிடம் கேட்டு வந்தார்.
மாவட்ட கவுன்சிலர் தேர்தலின் போது வாக்கு கேட்டு வந்த நஜிமுதீன் ஜஹாபர்சாதிக் என்பவரிடமும் அவர் தமது கோரிக்கையை முன் வைத்தார். தேர்தலில் வென்றவுடன் செய்து தருவதாக உறுதி அளித்து சென்றார். வாக்குறுதி அளித்தபடி, மாவட்ட கவுன்சிலராக வென்று ரூ. 5.34 லட்சம் செலவில் பாதை அமைத்து கொடுத்துள்ளார் நஜிமுதீன் ஜஹாபர்சாதிக்.
நஜிமுதீன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், எனது நீண்டகால கோரிக்கை நிறைவேறியது. கவுன்சிலர் முதலில் ஒரு கோவிலில் தமது பணியை செய்யத் தேர்ந்தெடுத்தது, கடவுள் ஒன்று என்பதை நிரூபிக்கிறது. நான் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சிதம்பரம் கூறினார்.
கோயிலைச் சுற்றி சரியான கட்டமைப்பு இல்லை. கற்களும் முற்களுமாக இருந்தது. பக்தர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். கொரோனா காரணமாக, நிதி ஒதுக்கீடு நிதி மிகவும் கால தாமதமாக கிடைத்தது. லாக்டவுன் சமயத்தில் நான் துபாயில் இருந்தேன். அங்கிருந்தபடியே பஞ்சாயத்து தலைவர் உதவியுடன் முதலில் ரூ .5.34 லட்சம் பெற்றோம், அதை இந்த கோவிலுக்கு பயன்படுத்த முடிவு செய்தோம் என்கிறார் நஜிமுதீன்.
அவர் மேலும் கூறியதாவது: ஒரு கவுன்சிலராக, எல்லோரும் எனக்கு ஒரே மாதிரியானவர்கள். மதம், சாதி, மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விரும்புகிறேன். எனது மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் அளிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற முயற்சிப்பேன் என்று நஜிமுதீன் கூறினார்.