மாதிரி புகைப்படம்

டுப்பி

கால்நடைகளை எடுத்துச் சென்ற ஒருவர் மர்ம மரணம் அடைந்துள்ளது பஜ்ரங் தள் மீது சந்தேகத்தை உண்டாக்கி இருக்கிறது

கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்தவர் 61 வயதான ஹுசைன்பாபா.    இவர் சில கால்நடைகளை பெர்தூர் என்னும் இடத்தில் இருந்து உடுப்பி நகருக்கு ஒரு ஸ்கார்பியோ வாகனத்தில் மேலும் மூவருடன் சேர்ந்து சட்ட விரோதமாக எடுத்துச் சென்றுள்ள்ளார்.   கடந்த மாதம் 30 ஆம் தேதி சுமார் 4 மணி அளவில் அவர் ஜொகட்டே என்னும் இடத்தில் சென்றுக் கொண்டிருந்த போது காவல்துறையினர் சோதனைக்காக   நிறுத்தி உள்ளனர்.

காவல்துறையினரைக் கண்டதும் மூவரும் வாகனத்தில் இருந்து தப்பி ஓடி உள்ளனர்.   அதில் மூவர் ஒரே திசையில் தப்பி ஓடி உள்ளனர்.  ஹுசைன்பாபா எதிர்ப்புறமாக ஓடி உள்ளார்.  அவரை துரத்தி சென்ற காவல்துறையினர் அவரை பிணமாக கண்டெடுத்ததாக தெரிவிக்கின்றனர்.   அவர் வழியில் தடுக்கி விழுந்து மரணம் அடைந்ததாக காவல்துறையினர் கூறி உள்ளனர்.

ஆனால் ஹுசைன்பாபாவின் உறவினர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து இந்து அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் அவரை மடக்கியதாகவும்,  அவரை பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்கி கொன்றதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஹுசைன் பாபாவின் மைத்துனர், “ஹுசைன்பாபா கடந்த 35 வருடமாக கால்நடைகள் வியாபாரம் செய்து வருகிறார்.   இதற்கு பஜ்ரங் தள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த அமைப்பினர் இவரை தாக்கி கட்டிப் போட்டு சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைபடுத்தி உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இதை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.   காவல்துறை அதிகாரி இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும்,  ஹுசைன் பாபா கொல்லப்பட்டிருந்தால் கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.