மீரட்

பாஜக தொப்பிய அணிய மறுத்ததால் வகுப்பு தோழர்களால் துன்புறுத்தப்பட்ட இஸ்லாமிய மாணவியை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

மீரட் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து இந்த மாதம் 2 ஆம் தேதி அன்று 55 மாணவ மாணவிகள் ஆக்ராவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அந்த மாணவர் கூட்டத்தில் ஒரே ஒரு இஸ்லாமிய மாணவி மட்டுமே இருந்துள்ளார். அதைத் தவிர 2ஆண் ஆசிரியர் உட்பட 4 பேர் அவர்களுடன் சென்றுள்ளனர். அப்போது அந்த ஆண் மாணவர்களில் சிலர் மது அருந்தி விட்டு அந்த பெண்ணிடம் கலாட்டா செய்ய தொடங்கினர்.

அவர்கள் பாஜக படம் அணிந்த தொப்பிகளை எடுத்து வந்து அந்த பெண்ணை அணியச் சொல்லி உள்ளார்கள். அந்தப் பெண் மறுக்கவே அவர்கள் அவரிடம் தவறாக நடக்க முயன்று அவரை பல இடங்களில் தொட முயன்றுள்ளனர். இவை அனைத்தும் ஒரு பேருந்தில் நடந்துள்ளது அங்கிருந்த இரு ஆண் ஆசிரியர்களும் இந்த மாணவரகளை கண்டிக்கவில்லை என கூறப்படுகிறது.

மீரட் வந்ததும் அந்த கல்லூரி மாணவி இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அத்துடன் இந்த விவரங்களை தனது டிவிட்டரில் பதிந்துள்ளார். கல்லூரி நிர்வாகம் இரு மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது அங்குள்ள இந்துத்வா அமைப்பான பஜ்ரங் தள் தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் தங்களுடன் விஸ்வ இந்தி பரிஷத் தொண்டர்களையும் கல்லூரிக்கு அழைத்து வந்துள்ளனர். கல்லூரி நிர்வாகத்திடம் அந்த மாணவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யுமாறு தொண்டர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன் அந்த மாணவியை தனது புகாரை திரும்ப பெற வற்புறுத்தி உள்ளனர். இந்நிலையில் அந்த இஸ்லாமிய மாணவி கல்லூரி நிர்வாகத்தால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கல்லூரி இயக்குனர் சர்மா, “அந்த மாணவி கடந்த 3 ஆம் தேதி புகர் அளித்தார். ஆனால் அதன் பிறகு விசாரணைக்கு வருமாறு பல முறை அழைப்பு அனுப்பியும் அவர் வரவில்லை. நடந்த சம்பவம் குறித்து விசாரணைக் குழுவினர் அவரிடம் இருந்து நேரடி அறிக்கை ஒன்றை கேட்டனர். அதையும் அவர் அளிக்கவில்லை. அதனால் அந்த மாணவி இடைநிலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.