கொல்கத்தா:

மேற்கு வங்கம் மாநிலம் இந்தியா&பங்களாதேஷ் எல்லை பகுதியில் உள்ளது மால்டா மாவட்டம். இந்த மாவட்டம் கள்ள நோட்டு அச்சடிப்புக்கு பிரபலமானதாகும். கொல்கத்தாவில் இருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த மாவட்டத்தின் மணிக்சக் வட்டாரத்தில் உள்ளது ஷேக்புரா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 6 ஆயிரம் குடும்பங்களில் 2 குடும்பங்கள் மட்டுமே இந்து குடும்பமாகும். மீதமுள்ளவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்.

இதில் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்த பிஸ்வஜித் ரஜாக் என்ற 35 வயது வாலிபர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரஜாக்கின் தந்தையிடம் இறுதி சடங்குகள் செய்வதற்கு ஆள் பலமும் இல்லை. பண பலமும் இல்லை.

இதையறித்த அந்த பகுதி முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ரஜாக் உடலுக்கு இந்து வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்தனர். இதற்கான செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொண்டனர். வீட்டில் இருந்து சுடுகாடு அமைந்துள்ள 3 கி.மீ. தூரத்திற்கும் ரஜாக் உடலை முஸ்லிம்கள் தோலில் சுமந்து சென்று, இறுதி சடங்குகளை நடத்தி ஆற்றில் சாம்பலையும் கரைத்தனர். உள்ளூர் மசூதியில் மவுலவியும் இதில் கலந்துகொண்டார்.

ஏற்கனவே ரஜாக்கின் சிகிச்சைக்கும் முஸ்லிம்கள் பணம் கொடுத்து உதவியுள்ளனர். ரஜாக் தந்தையுடன், ரஜாக்கின் மனைவி, 3 மகள்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்துத்வா அமைப்புகள் கொல்கத்தாவில் ராம நவமி விழாவை சூலாயுதம் ஏந்தி கொண்டாடினார்கள். பல்வேறு கண்டனங்களுக்கு இந்த நிகழ்ச்சி ஆளானது. இந்நிலையில் இந்து ஒருவரது உடலுக்கு முஸ்லிம்கள் இணைந்து இறுதி சடங்கு செய்த செய்திகள் பரவி வருகிறது.