தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்து காவலருக்கு இஸ்லாமியர்கள் அஞ்சலி

ஷோபியன்,  காஷ்மீர்

காஷ்மீர் தீவிரவாதிகளால் கொல்லபட்ட காவலர் குல்வந்த் சிங் மறைவுக்கு அருகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

பயங்கரவாதிகளின் மிரட்டலால் கடந்த 1990 களில் காஷ்மீரில் இருந்து பல இந்துக்கள் வெளியேறினர்.   அப்போது காஷ்மீர் மாநிலத்தில் ஷோபியன் மாவட்டத்தில் அமைந்துள்ள கப்ரான் என்னும் ஒரு சிற்றூரில் ஒரே ஒரு இந்து குடும்பத்தினர் மட்டும் இருந்தனர்.   அவர்களை அருகில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அங்கிருந்து செல்ல வேண்டாம் என தடுத்தனர்.   அன்று முதல் இன்று வரை அந்த குடும்பத்தை தங்கள் குடும்பமாகவே இஸ்லாமியர்கள் கருதி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிஜ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பினர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.  அதில் ஒரு சில காவல்துறையினர் உடனடியாக பதவி விலகாவிடில் அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தனர்.   அவர்கள் ராஜினாமா செய்யாததால் அவர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொன்றுள்ளனர்.   அந்த காவல்துறையினரில் ஒருவான குல்வந்த் சிங் மேலே குறிப்பிட்ட இந்துக் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவருடைய மறைவுக்கு அந்த ஊரில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.   இது குறித்து குல்வந்த் சிங் இல்லத்தின் மிக் அருகில் வசிக்கும் அகமது, “எங்கள் கண் முன்னே சிறு குழந்தையாக வளர்ந்தவர் குல்வந்த் சிங்.   அவருடைய கொலை இந்த பகுதியில் உள்ள அனைவரையும் உருக்கி விட்டது.   அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்ள இந்த கிராமத்தினர் அனைவரும் விடுமுறை எடுத்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

அவருடைய சடலத்தை எரிக்க இடம் அளித்தவரும்  அதற்காக உதவியவர்களும்   அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட அனைவரும் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.