உத்கல் ரெயில் விபத்து : இந்து சன்யாசிகளை காத்த இஸ்லாமியர்கள் !

மீரட்

ரெயில் விபத்தில் மாட்டிக் கொண்ட இந்து சன்யாசிகள், தங்களை இஸ்லாமியர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாக நன்றியுடன் தெரிவித்தனர்.

கலிங்கா உத்கல் ரெயில் சமீபத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.   அதில் பலர் காயமுற்றனர்.   சுமார் 23 பேர் மரணம் அடைந்தனர்.  இந்த ரெயிலில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பகவன்தாஸ் மகாராஜ் என்னும் சன்யாசியும், மற்றும் அவருடம் ஆறு சன்யாசிகளும் பயணம் செய்தனர்.  ஹரித்வார் சென்று அங்கு கங்கா ஸ்னானம் செய்ய அவர்கள் இந்த பயணைத்தை மேற்கொண்டனர்.   இடையில் விபத்தில் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து பகவன்தாஸ், “எங்களுடைய ரெயில் பெட்டியில் நாங்கள் எங்களுக்குள்ளும், உடன் பயணித்த தாய்மார்களுடனும் பேசிக் கொண்டு வந்தோம்.  திடீரென ஒரு பயங்கர சத்தத்துடன், எங்கள் ரெயில் பெட்டி உருள ஆரம்பித்ததும், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  நான் எனது இருக்கையில் இருந்து இரண்டு அடி மேலே சென்று திரும்ப கீழே விழுந்தேன்.   எங்கும் கூச்சலும், கூக்குரலுமாக இருந்தது.  அப்போது அங்கு வந்த உள்ளூர் இஸ்லாமியர்கள் எங்களை வெளியே அழைத்து வந்து, தண்ணீர் கொடுத்து, உதவினர்.  எங்களில் அடிபட்டவர்களுக்கு உடனடியாக அவர்களுடன் இருந்த ஒரு டாக்டர் முதலுதவி சிகிச்சை அளித்தார். எங்களால் இந்த உதவியை ஆயுளுக்கும் மறக்க முடியாது.   உண்மையில் அவர்கள் இல்லையெனில் நாங்கள் உயிர்பிழைத்திருக்க முடியாது.   இந்து – இஸ்லாமியரிடையே பேதமில்லை என்பதை அந்த இஸ்லாமிய சகோதரர்கள் நிரூபித்து விட்டனர்” என கண்ணீருடன் தெரிவித்தார்.

பகவன்தாஸுடன் வந்த சன்யாசிகளில் மூவர் படுகாயம் அடைந்ததால் அவர்கள் மீரட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  அவர்களில் ஒருவர் “எங்களை வந்து காத்த கடவுள் என்றுதான் நாங்கள் அந்த இஸ்லாமியர்களை நினைக்கிறோம்.   அரசியல்வாதிகள் பிரிக்க நினைத்தாலும், இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை.” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.