பா ஜ க முதல்வர் பேரணியில் இஸ்லாம் பெண்களுக்கு இழிவு

பாலியா, உ.பி

பாஜக ஆளும் உபியின் முதல்வர் பேரணியில் இஸ்லாம் பெண்ணை புர்காவை கழற்ற போலீசார் வற்புறுத்தி உள்ளனர்.

பா ஜ க ஆளும் உ பி யின் முதல்வர் பாலியா என்னும் இடத்தில் ஒரு கட்சிப் பேரணியில் கலந்து கொள்ள வந்துள்ளார்.  மூன்று நாட்கள் முன்பு அவருக்கு ஒரு நிகழ்வில் கருப்புக் கொடி காட்டப்பட்டது   அதையொட்டி இந்த நிகழ்வில் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  அந்த சமயத்தில் ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம் போலீசார் பேசிய காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது.

அந்தப்  பதிவில் சில போலீசார் ஒரு பெண்ணிடம் பேசுகின்றனர்.   அவர் புர்கா என்னும் இஸ்லாமிய உடையை அணிந்துள்ளார்.  அவர்கள் பேசிய பின் அந்தப் பெண் தன் புர்காவின் மேல் அணிந்திருந்த காவி துப்பாட்டாவை எடுத்துவிட்டு புர்காவை கழற்றி விடுகிறார்.   அதன் பின் மடித்து வைக்கப்பட புர்காவை போலீசார் எடுத்துச் செல்கின்றனர்.

இது குறித்து அந்தப் பெண்ணிடம் சில பத்திரிகையாளர்கள் கேட்ட போது, அவர், “என் பெயர் சாய்ரா.   நான் பல காலமாக பா ஜ கவில் உறுப்பினர்.  என் கணவரும் பா ஜ க உறுபினர்.   எனது புர்கா கறுப்பு நிறத்தில் இருந்ததால் அவர்கள் அதைக் கழற்றச் சொல்லி இருப்பார்கள்.   இதனால் ஒன்றும் தவறில்லை” என பெருந்தன்மையாக கூறி உள்ளார்.

இது குறித்து காவல் துறை தரப்பில், “நாங்கள் இது குறித்து எந்தப் புகாரும் பெறவில்லை.  கறுப்புத் துணிகள் அங்கு இருக்கக் கூடாது என்பதை மட்டுமே போலீசார் கவனித்து வந்தனர்.  ஒரு இஸ்லாமியப் பெண்ணை நாங்கள் புர்காவை அகற்றும் படி கூற மாட்டோம்” என தெரிவித்துள்ளனர்.