இந்துக்களுக்கு இந்தியா ஒரே நாடு இஸ்லாமியருக்கு 150 நாடுகள் : சர்ச்சையைக் கிளப்பும் பாஜக முதல்வர்

கமதாபாத்

ந்துக்களுக்கு ஒரே நாடாக இந்தியா உள்ள நிலையில் இஸ்லாமியருக்கு 150 நாடுகள் உள்ளதாகக் குஜராத் பாஜக முதல்வர் விஜய் ரூபானி பேசியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

நாடெங்கும் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக  நடந்து வருகின்றனர்.   இதனால் வன்முறை வெடித்துப் பல இடங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.    மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் இந்த சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட மாட்டாது என அறிவித்துள்ளனர்.   இதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பாஜக ஆளும் குஜராத் மாநில அரசு இந்த சட்டத் திருத்தத்தை அமல் படுத்த ஆர்வம் காட்டி வருகிறது.  இது குறித்து அகமதாபாத்தில் பாஜக ஒரு பேரணியை நடத்தியது.  சபர்மதி ஆசிரமம் அருகில் நடந்த இந்தப் பேரணியில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி கலந்துக்கொண்டு உரையாற்றினார்.   அவர் பேசியது நாடெங்கும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ரூபானி, ”இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த போது அங்கு இந்துக்கள் 22% பேர் இருந்தனர்.  ஆனால் தற்போது அது 3% ஆகக் குறைந்துள்ளது.  அங்கு இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் இந்தியா வர விரும்புகின்றனர்.  அதைப் போல் வங்க தேசத்தில் இந்துக்கள் எண்ணிக்கை 2% ஆகக் குறைந்துள்ளது.  அத்துடன் ஆப்கானிஸ்தானில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் சுமார் 2 லட்சம் பேர் இருந்த நிலையில் தற்போது 500 பேர் மட்டுமே உள்ளனர்.

இஸ்லாமியர்களுக்கு உலகெங்கும் 150 இஸ்லாமிய நாடுகள் உள்ளன்.  அவர்கள் இவற்றில் எங்கு வேண்டுமானாலும் வசிக்க முடியும்.   இந்துக்களுக்கு இந்தியா ஒன்று மட்டுமே உள்ளது.  ஆகையால் அவர்கள் இங்கு திரும்பி வருகின்றனர்.  இதில் யாருக்கு என்ன பிரச்சினை?   கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் அகதிகளில் 10000 பேர் தலித்துகள்.   ஆனால் எதிர்க்கட்சிகள் அதைக் கருத்தில் கொள்ளாமல் அரசியல் ஆதாயத்துக்காக இந்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கின்றனர்” எனப் பேசி உள்ளார்.