Random image

திருப்பதியில் நாதஸ்வரம் வாசிக்கும் ஆஸ்தான வித்வான்களான இஸ்லாமிய சகோதரர்கள்

மீப காலமாக, தேவையற்ற மத சர்ச்சைகள் சிலரால் ஏற்படுத்தப்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். ஆனால், மத ஒற்றுமையும், அன்பும், சகோதரத்துவமும்தான் பாரத நாட்டின் அடையாளம் என்பதை உறுதி செய்யும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

அவற்றில் ஒன்று, திருப்பதி திருமலை கோயிலில்  இஸ்லாமிய சகோதரர் கள் நாதஸ்வரம் வாசித்து வருவது.

ஆம்.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்லாமிய சகோதரர்கள் கடந்த 24 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலைச்சேவையாற்றி வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய சகோதரர்கள் காசிம், பாபு ஆகியோர். இவர்கள், மத்திய அரசின் பத்மஸ்ரீ  விருது பெற்ற நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மவுலானாவின் மகன்கள்.

இவர்கள் தங்கள் தந்தையையே குருவாக ஏற்று, ஏழு வயதில் நாதஸ்வரம் கற்க ஆரம்பித்தார்கள்.

17 வயதில் தனியாக நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்த காசிம், பாபு சகோதரர்கள், திருப்பதி தேவஸ்தானத்தில் தங்கள் நாதஸ்வர இசையால்  கலைச்சேவை செய்ய ஆரம்பித்தனர். இவர்களின் அர்ப்பணிப்பான கலைச்சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக  கடந்த 1996 ஆம் வருடம் கோவிலின் ஆஸ்தான வித்வான்களாக அறிவித்தது திருப்பதி தேவஸ்தானம்.

இதையடுத்து பிரம்மோற்சவம், ரத சப்தமி, ஆனி ஆஸ்தானம், தெலுங்கு வருடப்பிறப்பு, திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்விலும் கடந்த 24 வருடங்களாக இந்த இஸ்லாமிய சகோதரர்கள் நாதஸ்வர இசை பொழிந்து வருகிறார்கள்.

தற்போது திருப்பதி பிரம்மோத்ஸ்வம் நடந்துவரும் இந்த வேளையிலும் இவர்களது நாதஸ்வர இசை திருமலையை இசையால் நிறைக்கிறது.

இவர்களின் திறமையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது அளித்துள்ளது.

ஆன்மிகம் என்பது அன்பு என்பதை இசையால் நிரூபித்துவருகிறார்கள் இச்சகோதரர்கள்.