ர்தா:

சாலையில் கிடந்த பசுவின் உடலை அப்பகுதி இஸ்லாமிய மக்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த சம்பவம் ம.பி. மாநிலத்தில் நடந்துள்ளது.

 

ம.பி. மாநிலத்தில் பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக இருக்கிறார். இம்மாநிலத்தில் . ஹர்தா மாவட்டத்தில், பசுக்களை பராமரிக்கும் கோசாலை செயல்படுகிறது. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த பசு ஒன்று, உடல் நலன் பாதிக்கப்பட்டதால், கோசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இதனால் அப்பகுதியில் சுற்றித் திரிந்த அந்த பசு, சமீபத்தில், கோசாலை அருகே, இறந்து சாலையில் கிடந்தது. கோசாலையினர் இதை கண்டுகொள்ளவில்லை. அப்பகுதி மக்கள்,  நகராட்சி நிர்வாகத்திற்கு  தகவல் அளித்தனர்.  ஆனாலும்  பசுவின் உடலை அகற்ற யாரும் முன்வரவில்லை.

இந்த நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள்  இறந்த பசுவின் உடலை எடுத்துச் சென்று, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

இது குறித்து, சாஹித்கான் என்பவர் கூறுகையில், ”கோசாலை அருகே, சாலையில் பசு இறந்து கிடந்தது குறித்து, நகராட்சிக்கு தெரிவித்தும்  பல மணி நேரம் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  ஆகவே  பசுவின் உடலை நாங்களே எடுத்துச் சென்று, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தோம்,” என்று கூறினார்.

பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு, அப்பாவி மக்களை வதைக்கும் போக்கு நிலவுகிறது. இதில் பெரும்பாலும் இஸ்லாமிய மற்றும் தலித் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் கோசாலை நடத்துபவர்களே பசுவை கைவிட்ட நிலையில் இஸ்லாமிய மக்கள் அதை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.