சமூக புறக்கணிப்புகள் & அவமதிப்புகள் – வடகிழக்கு டெல்லியிலிருந்து வெளியேறும் முஸ்லீம்கள்!

புதுடெல்லி: சிஐஏ எதிர்ப்பு போராட்டத்தை ஒட்டி, வடகிழக்கு டெல்லியில், முஸ்லீம்களுக்கு எதிராக இந்துத்துவ குழுக்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் அதைத்தொடர்ந்த துன்புறுத்தல் மற்றும் அவமதிப்புகளால், தங்களின் வீடுகளை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுகின்றனர் முஸ்லீம்கள்.

தங்களுக்கு அருகாமையில் இவ்வளவு காலமும் வாழ்ந்த சக அண்டை வீட்டார்களின் புறக்கணிப்புகள் மற்றும் அவமதிப்புகளே இதற்கு காரணமாய் உள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், 14 வயதான ஃபிஸாவின் குடும்பத்தினர், ஷிவ் விஹாரிலிருந்த தங்களின் வீட்டை, சந்தை மதிப்பைவிட மிகக்குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர்.

இதுவே, மற்ற நேரமாக இருந்தால், கடந்த 2010ம் ஆண்டு வாங்கிய அவர்களின் வீட்டை, ரூ.20 லட்சத்திற்கு அவர்களால் விற்றிருக்க முடியும். ஆனால், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரூ.12 லட்சத்திற்கே விற்க முடிந்தது.

தங்கள் பகுதியில் வசிக்கும் இந்துக்கள் பலரும், தங்களுக்கு பலவகைகளில் இன்னல் தருவதாக கூறுகின்றனர் பல முஸ்லீம்கள். நாங்கள் எதிரிலோ அல்லது அருகிலோ வருவதைப் பார்த்தாலே, ‘கொரோனாவைரஸ்’ என்று எங்களைக் குறிப்பிட்டு, தங்களின் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்கின்றனர் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் பெயர் வெளியிட விரும்பாத பல முஸ்லீம்கள்.

எனவே, தங்கள் மீதான இந்த சமூகப் புறக்கணிப்புகளை தவிர்க்க, வடகிழக்கு டெல்லியிலிருந்து, தங்களின் சொத்துக்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்கின்றனர் முஸ்லீம்கள்.