அம்ரோகா:

உ.பி. மாநிலம் அம்ரோகா நகர் அருகே உள்ள சகத்பூர் கிராமத்தில் மசூதில் தொழுகை நடத்த அங்குள்ள பெரும்பான்மை சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

மசூதிக்குள் முஸ்லிம் கால் வைத்தால் வன்முறை வெடிக்கும் என்று ஆர்எஸ்எஸ் விவசாய அணி தலைவர் போலீசாருக்கும், முஸ்லிம்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் உள்ளூரில் உள்ள 500 முஸ்லிம்களும், அவர்களுடைய தலைவர்களும் வேறு இடங்களை நோக்கி செல்கின்றனர். சயித்நக்லி காவல் நிலைய எல்லையில் வரும் இந்த கிராமத்தில் கடந்த 3 நாட்களாக இந்த நிலை நீடிக்கிறது.

எஸ்பி சந்தோஷ் மிஸ்ரா கூறுகையில், ‘‘2016ம் ஆண்டு வரை இந்த நிலத்தில் மசூதி இருந்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. நூர் முகமது என்பவர் இந்த பகுதியில் ஒரு கட்டுமான அமைப்பை ஏற்படுத்தினார். இங்கு வெளியில் இருந்து வருபவர்கள் மதம் தொடர்பான போதனைகளை நடத்தினர். காலபோக்கில் இது மசூதியாக மாறிவிட்டது. அப்பகுதி மக்கள் இங்கு தொழுகை நடத்த தொடங்கிவிட்டனர். இதற்கு அங்குள்ள பெரும்பான்மை சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன் இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உள்ளூர் முஸ்லிம்கள் இந்த மசூதியில் தொழுகை நடத்தக் கூடாது என்று வருவாய் துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பான பாரதிய கிஸான் சங்க தலைவர்கள் சுக்ராம் பால் ரானா, மதன் பால் ஆகியோர் பாக்பத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் இங்கு வந்தனர்.

‘‘இங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதை தடுத்து நிறுத்தவில்லை என்றால் பெரும்பான்மை சமுதாயத்தினர் சார்பில் முஸ்லிம்களுக்கு எதிரான போர் நடக்கும்’’ என்று மாவட்ட நிர்வாகத்தை அவர்கள் எச்சரித்தனர்.

‘‘மேலும் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்படும். இதை போலீஸ் அல்லது முஸ்லிம் என யார் தடுத்தாலும் துண்டு துண்டாக வெட்டி வீசுவோம்’’ என்று ரானா மிரட்டல் விடுத்து பேசினார். ‘‘ரானாவின் பேச்சு மற்றும் கோஷங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு சுற்றுபுற கிராமங்களில் சமூக வளை தளங்களில் பரவியது. இதனால் அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக பதற்றம் ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது’’ என்று காவல் நிலைய அதிகாரி ராகேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளா.

ரானா, மதன் பால் உள்ளிட்ட 17 கிராமவாசிகள் மீது கொலை முயற்சி வழக்கு, அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியது, மத விரோதங்களை தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டிஐஜி ஓன்கர் சிங் கூறுகையில், ‘‘சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.

தற்போது அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராமத்தை விட்டு வெளியேறுவது குறித்து முஸ்லிம்கள் சிந்தித்து வருகின்றனர். ரம்ஜான் மாதத்தில் மசூதியில் தொழுகை நடத்துவதற்காக நுழைய விடாமல் போலீசார் தடுத்து வருகின்றனர். இதனால் அருகில் 6 கி.மீ தொலைவில் உள்ள உஜ்கரி கிராமத்திற்கு முஸ்லிம்கள் சென்று தொழுகை நடத்தி வருகின்றனர்.