போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாடகர் சோனு நிகாம் என்பவர் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இ ந்நிலையில் அங்குள்ள ஒரு இந்து கோவிலில் திருடு போன ஒலிபெருக்கிக்கு பதிலாக முஸ்லிம் ஒருவர் புதிய ஒலிபெருக்கியை பரிசளித்துள்ளார்.

இது பற்றிய விபரம்….

மத்திய பிரதேசம் மாநிலம் ஹர்தா மாவட்டம், ஹர்தா நகரில் ஹனுமன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலின் பூட்டை மர்ம நபர்கள் கடந்த 5 தினங்களுக்கு முன் உடைத்து அங்கு இருந்த ஒலிபெருக்கியை திருடிச் சென்று விட்டனர்.

ஹர்தா மாவட்ட வக்பு கமிட்டி தலைவரும், கவுன்சிலருமான சயீத்கான் தினமும் இந்த கோவிலை கடந்து செல்வார். அப்போது ஹனுமன் கோவிலில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பு இல்லாமல் இருந்தது. அப்போது இது குறித்து கோவில் அர்ச்சகரிடம் சயீத்கான் கேட்டறிந்தார்.

யாரேனும் ஒலிபெருக்கி வாங்கி கொடுத்தார்களா? என்று கேட்டார். அர்ச்சகர் இல்லை என்று பதில் கூறினார். இதையடுத்து சயீத்கான் தனது சொந்த செலவில் ஒலிபெருக்கி ஒன்றை புதிதாக வாங்கி வந்து அர்ச்சகரிடம் பரிசாக அளித்தார்.

இது குறித்து சயீத்கான் கூறுகையில்,‘‘கோவில்களிலும், மசூதிகளிலும் ஒலிபெருக்கி பயன்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் இது போன்ற செயல்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்’’ என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹர்தாவில் சயீத்கான் தலைமையில் இறந்த பசுவின் உடல் முஸ்லிம்களால் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஹரிதா ரெயிலில் மாட்டு இறைச்சி கொண்டு சென்றதாக கூறி ஒரு முஸ்லிம் தம்பதியரை இந்துத்வா அமைப்பினர் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

.