விஜயபுரா

துமக்கூருவில் உள்ள லிங்காயத்து சித்தகங்கா மடாதிபதி உடல்நலம் தேற இஸ்லாமியர்கள் விஜயபுரா முர்துஸ் கத்ரி தர்காவில் பிரார்த்தனை செய்தனர்.

கர்நாடக மாநிலம் துமக்கூருவில் லிங்காயத்துகள் மடமான சித்தகங்கா மடம் அமைந்துள்ளது.   இந்த மடாதிபதியான சிவக்குமார சாமிக்கு தற்போது 110 வயதாகிறது.   இந்த மடத்தில் உள்ள பள்ளியில் ஒன்பதாயிரம் பேர் பயின்று வருகின்றனர்.   இங்குள்ள மாணவர்களுக்கு  கல்வி, உடை, உணவு மற்றும் தங்குமிடம் முழுவதும் இலவசமாகும்.

சென்ற மாதம் சிவக்குமார சாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை ஒட்டி அவருக்கு சென்னையிலுள்ள ஒரு மருத்துவமனையில் பித்தப்பையில் அறுவை சிகிச்சை நடைபெற்று அதன் பிறகு மடத்துக்கு திரும்பினார்.   ஆயினும் மீண்டும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.  அதன் பிறகு அவர் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டான போதிலும்  படுத்த படுக்கையாக உள்ளார்.

அவருடைய உடல் நிலை தேற அவருடைய சீடர்கள் மற்றும் பக்தர்கள் கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.   ஜவாலி சமுக குழு என்னும்  இஸ்லாமிய அமைப்பு இவர் மீது மிகவும் அன்பு கொண்டுள்ளது.   இதன் தலைவர் ஜவாலி கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிவக்குமார சாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சிவக்குமார சாமியின் உடல் நிலை தேற அவருடைய குழு விஜயபுராவில் உள்ள முர்துஸ் கத்ரி தர்காவில் அதே தினம் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளனர்.  இது குறித்து ஜவாலி, “பல ஏழைக்குழந்தைகளுக்கு அவர் கல்வி, உடை, உணவு மற்றும் இருப்பிடம் அளித்துள்ளார்.   அவரால் பல ஏழைகள் சாதி மத வித்தியாசமின்றி முன்னுக்கு வந்துள்ள்னர்.

அவர் உடல்நிலை தேற அவருடைய பக்தர்கள் ஏராளமான கோவிலில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.   நாங்களும் அது போல தர்காவில் அவர் விரைவில் உடல்நிலை தேற சிறப்பு பிரார்த்தனை நிகழ்த்தி உள்ளோம்.   அவர் நீண்ட நாள் வாழ்ந்தால் மேலும் பல ஏழைகள் அவரால் முன்னேற்றம் அடைவார்கள்” என தெரிவித்தார்.