1947ம் ஆண்டிலே முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் சர்ச்சை பேச்சு

பாட்னா: 1947ம் ஆண்டிலே முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜகவில் சர்ச்சையான கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்களில் முக்கியமானவர் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். முஸ்லீம்களுக்கு எதிராக அடிக்கடி சர்ச்சையான கருத்துகள் கூறுவார்.

தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். 1947ம் ஆண்டிலேயே முஸ்லீம்களை பாகிஸ்தான் அனுப்பியிருக்க வேண்டும் என்று  கூறி இருக்கிறார்.

பீகார் மாநிலத்தில் புர்னியா பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசிய போது கூறியதாவது: 1947ம் ஆண்டுக்கு முன்பு  முகம்மது அலி ஜின்னா இஸ்லாமிய நாடு கோரி அழுத்தம் கொடுத்தார்.

நமது முன்னோர்கள் செய்த மிக பெரிய தவறு அதுதான். அதற்கான விலையை நாம் இப்போது கொடுத்து கொண்டு வருகிறோம். அந்த நேரத்தில், முஸ்லீம் சகோதரர்களை அங்கு (பாகிஸ்தான்) அனுப்பி விட்டு, நமது இந்துக்களை இங்கு கொண்டு வந்திருந்தால், இந்த சூழல் எழுந்திருக்காது என்றார்.