மகாதிர் முகமதுவுக்கு அதுவும் தெரியும்… இதுவும் தெரியும்..! – ஒரு வரலாற்று ஆய்வுக் கட்டுரை

கடந்த 1981ம் ஆண்டு முதல் 2003 வரையான நீண்ட காலகட்டத்தில் மலேசியாவின் பிரதமராக பதவி வகித்த மகாதிர் முகமது, ஒருமுறை கோலாலம்பூரில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் பேசிய உரை கவனிக்கத்தக்கதாக இருந்தது.

‘உலக அரசியல் நடவடிக்கைகளை யூதர்களிடமிருந்து முஸ்லீம்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்பதுதான் அவரது பேச்சின் சாரமாக இருந்தது.

2003ம் ஆண்டு பதவியிலிருந்து விலகி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு(2018) மீண்டும் அரியணை ஏறி, தற்போது இறங்கியுள்ள மகாதிர் முகமது, பதவி வகித்தபோது சமீபத்தில் பேசிய பேச்சும் கவனிக்கத்தக்கது. ‘பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் அராஜகங்களை நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். தனது செயல்களுக்காக இஸ்ரேல் கண்டிக்கப்படவும் தண்டிக்கப்படவும் வேண்டும்’ என்பது அவரது பேச்சின் முத்தாய்ப்பு கருத்துக்கள்.

மகாதிர் முகமது உலகளவிலான முஸ்லீம் தலைவர்களில் முக்கிய இடத்தைப் பெற்றவர் மற்றும் இஸ்லாமிய சிந்தனையாளராகவும் அறியப்படுபவர். தற்போது அவரின் 95 வயதிலும்கூட மலேசியா அவரை நம்ப வேண்டிய நிலை.

அன்று, யூதர்களிடமிருந்து முஸ்லீம்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென மகாதிர் முகமது பேசிய பேச்சிற்கு பெரியளவில் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கவில்லை.

ஏனெனில், பல இடதுசாரி மற்றும் மானுடவியல் ஆய்வாளர்கள் கூறுவதைப்போல், ஒரு அரசியல் இயக்கமாக உருவாகி, அரசியல் இயக்கமாகவே பெரியளவில் வளர்ச்சிப்பெற்ற இஸ்லாமை பின்பற்றுவோரில் வெகுதிரள் பிரிவினருக்கு, தொடக்க காலம் தொட்டே, அரசியல் புரிதல் மற்றும் அரசியல் அறிவு என்பது பஞ்சமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

உலக மதங்களிலேயே, நீண்ட மற்றும் அழகாக தொகுக்கப்பட்ட ரசிக்கத்தக்க அரசியல் வரலாற்றைக் கொண்ட ஒரே மதம் இஸ்லாம்தான் என்று சொன்னால், அதில் முரண்படுவதற்கு நிச்சயம் பெரிதாக எதுவுமிருக்காதுதான்.

அரசியல் புரிதலின் ஒரு பகுதியான அரசியல் ஒற்றுமை என்றதொரு அம்சம் இஸ்லாமைப் பொறுத்தவரை அரிதான நிகழ்வுகளே!

இஸ்லாமின் தூதர் முகமதுவின் மரணத்திற்குப் பிறகு, காலிஃபாவாக பொறுப்பேற்பவர், முகமதுவின் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமா? அல்லது நம்பிக்கைக்குரிய முஸ்லீமாக மட்டும் இருந்தால் போதுமா? (ஷியா – சன்னி மோதலின் அடிப்படை) என்பதில் தொடங்கி, எப்படியிருந்தாலும் அவர் மெக்காவின் குரைஷியாக இருத்தல் வேண்டும் என்பதில் நிலைக்கொண்டு, பின்னர், குரைஷி இனத்திலேயே பானு ஹஷிம் மற்றும் பானு உமையா என்ற இருபிரிவினருக்கான மோதலாக முற்றி நின்றது.

சிரியாவின் ஆளுநராக இருந்த பானு உமையா பிரிவைச் சேர்ந்த முவாவியா, அப்பிராந்தியத்தின் நிலவுடைமைச் சமூகத்தை, அரேபியாவின் இனக்குழு சமூகமாக மாற்ற முடியாததன் நடைமுறை நிதர்சனத்தை உணர்ந்து, சிரியாவை தலைமையகமாக வைத்து, மதத்தை மையப்படுத்தாத ஒரு பேரரசு அமைப்பை உருவாக்க முனைந்த நேரத்தில், இஸ்லாமின் நான்காவது காலிஃபாவாக(ரஷுதின் பிரிவில்) இருந்தவரும் பானு ஹஷிம் பிரிவைச் சேர்ந்தவருமாகிய அலியிடமிருந்து(முகமதுவின் நெருங்கிய உறவினர் மற்றும் மருமகன்) எதிர்ப்பு எழுந்தபோது, இஸ்லாமின் அரசியல் மோதல் ஒரு தெளிவான வடிவத்தை எடுக்கிறது.

ஒரு அரேபிய படையெடுப்பு (ஓவியம்)

பானு உமையா பிரிவைச் சேர்ந்த மூன்றாவது காலிஃபா உஸ்மான் இபின் அஃபான், எகிப்திய கிளர்ச்சிக்காரர்களால் கொல்லப்பட்டது குறித்த ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்ற முவாவியாவின் கோரிக்கை, அலியால் ஏற்கப்படாததும் இந்த மோதலின் காரணங்களில் ஒன்றாக இணைந்திருப்பதே.

அதன்பிறகான பல நூற்றாண்டுகள் இஸ்லாமில் பல அரசியல் மோதல்கள் உக்கிரமாக நடைபெற்று வந்துள்ளன. அந்த மோதல்களில், மெக்கா உள்ளிட்ட அவர்களின் புனித இடங்களும் பாதிப்படைந்த நிகழ்வுகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.

ஒரு பக்கம் மோதல்கள் நீடித்து வந்தாலும், உலக நாகரீகம், பரிணாமம் மற்றும் வரலாற்றுக்கு, பரந்துபட்ட இஸ்லாமிய சமூகம் தன் பங்கினை வலுவாக வழங்கத் தவறவில்லை என்பதையும் மறுக்க முடியாது.

சரி, இஸ்லாமின் அரசியல் வரலாற்றில் பயணிப்பதை நிறுத்திவிட்டு, இப்போது பாலஸ்தீனத்தை இலக்காக வைத்த ஸியோனிச இயக்கம் குறித்து லேசாகப் பார்வையிடலாம்.

1860ம் ஆண்டு ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் பிறந்த தியடோர் ஹெர்ஸல் என்ற யூதரிலிருந்து தொடங்குகிறது அரசியல் சார்ந்த நவீன ஸியோனிசம். யூதர்களின் தாயகப் பகுதியாகக் கருதப்படும் பாலஸ்தீனத்தில், யூதர்களுக்கென்று ஒரு நாட்டை மீண்டும் உருவாக்கிக் கொள்வது என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஸியோனிச இயக்கத்திற்கு நடைமுறை சார்ந்த அரசியல் சாத்தியங்களை வகுத்தளித்தவராக கருதப்படும் தியடோர் ஹெர்ஸல், இன்றைய இஸ்ரேலின் ஆன்மீகத் தந்தையாகப் போற்றப்படுகிறார்.

தியோடர் ஹெர்சல்

அவர், தன் காலத்திலேயே பாலஸ்தீனத்திற்கு வந்து சென்றவர். 44 ஆண்டுகளே உயிர்வாழ்ந்த அவர், யூதர்களின் புதிய நாட்டிற்காக செய்துவைத்த அடிப்படைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

முதலாம் உலகப்போருக்குப் பிறகு பிரிட்டனின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட பாலஸ்தீனப் பகுதியில், அரசியல் விழிப்புணர்வற்ற அரேபியர்களிடமிருந்து நிலங்களை வாங்குவது யூதர்களுக்கு சற்று எளிதாகவே இருந்தது. துருக்கிய சாம்ராஜ்யத்தின் கீழிருந்த மத்தியக் கிழக்குப் பகுதி, இன்றிருப்பதைப்போன்று அன்று இருக்கவில்லை.

முதல் உலகப்போரில் பிரிட்டனிடம் துருக்கியப் பேரரசு தோற்றபோது, அப்பிராந்தியம் முழுவதும் கிட்டத்தட்ட பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்து, பின்னர் பல்லாண்டுகள் கழித்தே, இன்றைய பல நவீன அரபு தேசங்கள் உருவாயின.

பாலஸ்தீனப் பகுதியில் பெருகிவந்த யூதர்களின் எண்ணிக்கையும் செல்வாக்கும் பாலஸ்தீன அரபிகளை தாமதமாகவே திடுக்குறச் செய்தன. ஆனால், அவற்றால் எந்தப் புண்ணியமும் இருக்கவில்லை.

பாலஸ்தீனத்திற்கு யூதர்களின் வருகை

அதே காலகட்டத்தில், டேவிட் பென்குரியன், செய்ம் வெய்ஸ்மேன், ஹெர்பர்ட் சாமுவேல், செய்ம் காஃப்லர், கோல்டா மேய்ர் உள்ளிட்ட யூத ஆளுமைகள், உலகளாவிய ஸியோனிச இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் யூதர்கள் பல்வேறு புத்திசாலித்தனமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களது இலக்கை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கையில், அரேபிய சமூகமோ தொடர்ச்சியான அரசியல் தவறுகளை இழைத்து, தங்களின் வழியில் தாங்களே தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்ட நிகழ்வுகள் அநேகம் எனலாம்.

1948ம் ஆண்டின் மே மாதம் 14ம் தேதி, குடியேற்ற யூதர்களால் உருவாக்கப்பட்ட டெல் அவிவ்(இஸ்ரேலின் முந்தைய தலைநகரம்) நகரில் அமைந்த மாடர்ன் ஆர்ட் மியூசியத்தில், இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடன அறிவிப்பை அந்நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்த டேவிட் பென்குரியன் வெளியிட்டபோது, அடுத்த சில மணிநேரங்களில் இஸ்ரேல் எனும் தனி யூத நாட்டை, அன்றைய உலகின் இருபெரும் வல்லரசுகளான அமெரிக்காவும் சோவியத் யூனியனும் அங்கீகரித்து அறிவிப்பு செய்ததே, யூதர்களின் புத்திசாலித்தனமான அரசியல் நகர்வுகளுக்கு சிறந்த சாட்சி!

(ஆனால், அதன்பின்னர் சிறிதுகாலத்திலேயே, ‘யூதர்கள், அமெரிக்காவிற்கான இயல்பான உளவாளிகள்’ என்று அறிவித்து, சோவியத் யூனியன் அதிபர் ஸ்டாலின், யூதர்களை ஒதுக்கிவிட்டார் என்பது வேறு கதை)

ஆனால், சுதந்திரப் பிரகடன அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, இஸ்ரேலை சுற்றி நின்று தாக்குதலைத் தொடுத்தன எகிப்து, சிரியான மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட அரபு நாடுகள். ஆனால், பாலஸ்தீனத்தில் செயல்பட்ட பல யூத பாதுகாப்புப் படைகளான இர்குன், லெஹி, பல்மாக், ஹிஷ் போன்றவை, யூதர்களின் பெரிய பாதுகாப்புப் படையான ஹகானா, பிரிட்டன் ராணுவத்துடனேயே பலமுறை துணிச்சலாக மோதியது உள்ளிட்ட பல்வேறான நிகழ்வுகளைக் கண்ட பிறகும், இஸ்ரேல் ஒரு தனிநாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், யூதர்கள் எப்படியான ஒரு ராணுவக் கட்டமைப்பை வைத்திருப்பார்கள் அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்திருப்பார்கள் என்பதை யூகிக்கத் தவறியதும் அல்லது தயாரில்லாததும் அரேபிய முஸ்லீம்களின் அரசியல் புரிதலின்மைக்கு மற்றொரு உதாரணம்.

இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம்

போரில் வெற்றி கிடைக்காத அரபு நாடுகளின் கூட்டணி, அடுத்ததாக பாலஸ்தீன அரேபியர்களுக்கு செய்ததுதான் அதிர்ச்சிகரமான துரோகம்! போரில் வென்ற யூதர்கள், பாலஸ்தீனத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

மீதமிருந்த பகுதிகளை வைத்து, தங்களின் அரபு சகோதரர்களுக்காக ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள தயாராயில்லாத அரபு நாடுகள், அப்பகுதிகளை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டார்கள்.

பின்னர், 1956ம் ஆண்டு நடந்த சூயஸ் கால்வாய் போர், 1967இல் நடந்த புகழ்பெற்ற 6 நாள் அரபு – இஸ்ரேலிய போர், 1973ம் ஆண்டில் நடந்த ‘யோம் கிப்புர்’ போர் என்ற எதிலுமே இஸ்ரேலை அசைக்க முடியவில்லை. அந்தப் போர்களில், அரபு நாடுகளிடமிருந்த பாலஸ்தீனப் பகுதிகளும்கூட இஸ்ரேலிடம் வந்துவிட்டன என்பது மற்றுமொரு கொடுமையான சுவாரஸ்யம்!

தற்கால சூழலில், தங்களுக்கென எஞ்சிய காஸா மற்றும் மேற்கு கரைப் பகுதிகளில் பாலஸ்தீன அரேபியர்கள் படும் அல்லல்கள், நாம் அவ்வப்போது செய்திகளில் பார்ப்பவைதான்! எதிரி என்ன செய்வான் என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், துரோகிகளால் நிகழும் தீங்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தவல்லது என்பதும் புதிய விஷயமல்ல!

உலக ஸியோனிஸ இயக்கம் முழுவீச்சில் இயங்கிவந்த 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஐரோப்பாவின் புகழ்பெற்ற யூதர்களாக விளங்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் செக்மன்ட் ஃபிராய்டு உள்ளிட்டோர், அரசியல்ரீதியான இஸ்ரேலை ஆதரிக்கவில்லை என்றும், மாறாக, யாருக்கும் பாதிப்பில்லாத ஆன்மீக இஸ்ரேலைத்தான் ஆதரித்தார்கள் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால், அதுவெல்லாம் நடைமுறை அரசியல் அபிலாஷைக் கொண்ட பெரும்பான்மை யூதர்களை எள்ளளவும் பாதிக்கவில்லை.

இஸ்ரேல் என்ற தனிநாடு, பாலஸ்தீனத்தில் அமைவதை உலகின் எத்தனையோ பிரபலங்கள் அன்றைய நாளில் எதிர்த்தார்கள். இந்தியாவின் காந்தியடிகளும் அவர்களுள் ஒருவர். பிரிட்டன், தனது காலனியாதிக்கத்திலுள்ள ஏதேனும் ஒரு தீவில், ஒரு தனி யூத நாட்டை அமைத்துக் கொடுக்கலாமே? என்ற கேள்வி பாணியிலான ஆலோசனைகளும் கிடைத்தன.

“ஆனால், தங்களின் தாயகம் இன்றைய பாலஸ்தீனம் என்றழைக்கப்படும் அந்தப் பகுதிதான். தங்களின் மகத்துவம் பொருந்திய இறைத்தூதர் ஆப்ரகாம் சம்பந்தப்பட்டது அப்பகுதிதான். தங்களுக்கென இறைவன் வாக்களித்த ‘கானான்’ தேசம் அப்பகுதியில்தான் இருந்தது & இருக்கிறது. தங்களின் பண்டையப் பேரரசுகளாகிய ‘ஜுடேயா மற்றும் சமாரியா’ போன்றவை அமைந்து சிறந்திருந்தது அப்பகுதியில்தான். தாங்கள் பாரசீகர்கள், பாபிலோனியர்கள் மற்றும் ரோமானியர்களால் துன்புறுத்தி, அடிமைப்படுத்தப்பட்டதும் அப்பகுதியில்தான். பின்னர், உலகின் வேறு பகுதிகளுக்கு சிதறடிக்கப்பட்டதும் அப்பகுதியில் இருந்துதான்” என்பது யூதர்களின் வலுவான வாதமாக இருந்தது. அது அவர்களுக்கு அரசியல் வாதமாகவும் பயன்பட்டது.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில், நாஸிக்களால், பல லட்சக்கணக்கான யூதர்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதானது, அவர்களின் தனி நாடு அமைக்கும் முயற்சியில், பல நாடுகளின் அனுதாபத்தைத் திரட்டுவதற்கு பேருதவியாக இருந்தது.

டேவிட் பென்குரியன் & ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஏராளமான ஆண்டுகள், பாலஸ்தீனப் பகுதியிலே அடிமைகளாக வாழ்ந்திருந்து, ஒரு கட்டத்தில், ரோமானியர்களால் (2000 ஆண்டுகளுக்கு முன்பாக) பாலஸ்தீனத்திலிருந்து விரட்டப்பட்டு, எங்கெங்கோ அலைந்து திரிந்து, எங்கெங்கோ குடியேறி, பல்வேறு இடங்களில், புறக்கணிப்புகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் படுகொலைகளுக்கும் ஆளாகிய யூதர்களுக்குள், தங்களுக்கென மீண்டும் ஒரு சுதந்திர தனிநாடு என்ற கனவும், அதற்கான செயல்திட்டமும் மிக மிக வலுவாகவும் ஆவேசமாகவும் இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள அதிக ஆய்வுகளையெல்லாம் நாம் செய்ய வேண்டியதில்லைதான்.

ஆனால், கி.பி.7ம் நூற்றாண்டில், அரேபிய பாலைவனத்தில் ஒரு சிறிய அரசை உருவாக்கி, பின்னர் உலகளவில் பல ஆச்சர்யமளிக்கும் வகையிலான ராணுவ வெற்றிகளை ஈட்டி, அன்றைய அறியப்பட்ட உலகில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கை, ஒரு குறிப்பிட்ட மத (இஸ்லாம்) அடையாளத்தின் கீழ் பல்வேறு அரசுகள் ஆளுகை செலுத்துவதற்கு மூல காரணமாய் இருந்த அரேபிய முஸ்லீம்களுக்கு, உலகின் பல பகுதிகளில் ஆளும் வர்க்கமாகவும் செல்வாக்கு செலுத்துபவர்களாகவுமே நீண்டகாலம் பழக்கப்பட்டுவிட்ட அவர்களுக்கு, யூதர்கள் அளவிற்கு வெறி இருந்திருக்க வாய்ப்பில்லைதான்!

இஸ்லாமுக்கு முன்பிருந்தே யூதர்களின் மீது அரேபியர்களுக்கு எப்போதும் தனி மரியாதைதான்! இஸ்லாமுக்கு பின்னர், புதிய அரசியல் எழுச்சி பெற்றாலும், யூதர்களின் விஷயத்தில், முஸ்லீம்கள் அந்தளவிற்கு கொடுமையானவர்களாய் இல்லை என்றே கடந்தகாலப் பதிவுகள் கூறுகின்றன.

உலகளவில், யூதர்களிடம் கிறிஸ்தவர்கள் நடந்துகொண்ட முறையுடன் ஒப்பிடுகையில், முஸ்லீம்கள், யூதர்களை நடத்தியவிதம் மேலானது என்பதே வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிற விஷயங்கள்!

இஸ்ரேல் என்ற தனிநாடு உருவாகி, 70 ஆண்டுகள் கடந்து சென்றுவிட்ட நிலையில், நிலைமைகள் எவ்வளவோ மாறிவிட்டன. கடந்த 70களின் இறுதியிலேயே எகிப்தும் இஸ்ரேலும் இனி சண்டையில்லை என்று தோஸ்தாகிவிட்டன.

எகிப்து – இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம்

கடந்த 90களின் மத்தியில், இஸ்ரேலுடன் கைகுலுக்கி பிரச்சினையிலிருந்து ஒதுங்கிக்கொண்டுவிட்டது ஜோர்டான். இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் விஷயத்தில், சவூதி அரேபியாவும் இஸ்ரேலும் உளவுத் தகவல்களைப் பகிரத் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அந்ந இருநாடுகள் இனிமேல் மோதிக்கொள்வதெல்லாம் கனவில் வேண்டுமானால் நடக்கலாம்!

இஸ்ரேலுடன் தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டிருந்த சிரியாவின் இன்றைய நிலையை சொல்லத் தேவையில்லை. மற்றொரு நாடான ஈராக், கிட்டத்தட்ட சிதைந்தே விட்டது. லெபனான், அப்போதிருந்தே ஒரு பாவப்பட்ட பூச்சி! உலகப் புகழ்பெற்றிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கம், யாசர் அராஃபத்தின் மறைவுக்குப் பின்னர் என்ன ஆனதென்றே தெரியவில்லை!

ஆனால், இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே அழிப்போம்! என்பதாக தனது வன்மத்தை வெளிப்படையாகவே தெரிவித்து, உலக தலைவர்களின் சந்திப்புகளில் இஸ்ரேல் பிரதிநிதிகளுடன் சம்பிரதாயமாக கைகுலுக்குவதைக் கூட மறுக்கும் பழைய பாரசீகமான இன்றைய ஷியா ஈரானுக்கும், சவூதி உள்ளிட்ட சன்னி அரபு தேசங்களுக்குமான உறவு என்பது எண்ணெயில் வெடிக்கும் எள்ளு மாதிரிதான்!

 பாலஸ்தீன போராட்டம்

ஆக, இஸ்ரேல் என்ற தனிநாட்டை உருவாக விட்டுவிடக்கூடாது என்ற முனைப்பில் இறங்கி, சுதந்திரப் பிரகடனம் வெளியான மறுநாளே, இஸ்ரேலின் மீது போர் தொடுத்து தங்களின் பகையை, யூத நாட்டின் மீது பதிவுசெய்த அரபு நாடுகளில், பல நண்பர்களாகிவிட்டன, சில நாடுகள் சிதைந்து விட்டன, சில நாடுகள் வாழ்விற்காக போராடிக் கொண்டுள்ளன, இன்னும் வலுவில் இருக்கும் சில நாடுகளோ, ஒற்றுமையின்மை எனும் நோயில் சிக்குண்டுள்ளன. ஆக மொத்தம், இஸ்ரேலுக்கு இப்போது மத்திய கிழக்கில் பெரிய பிரச்சினை எதுவுமில்லை என்றே கூறலாம். (ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களின் பிரச்சினையை இஸ்ரேல் வேறுமாதிரி கையாண்டு வருகிறது).

சுதந்திரப் பிரகடனம் செய்தபோதே, ஜெருசலேமை தனது நிரந்தர தலைநகரம் என்று அறிவித்திருந்த இஸ்ரேல், இப்போது அதை நடைமுறை சாத்தியமாக்கி, அமெரிக்காவின் முழு ஆதரவையும் பெற்றுவிட்டது.

 

ஜெருசலேம்

ஆக, இப்படியான மாறிய அரசியல் வரலாற்று நிகழ்வுகளில் சிக்குண்ட பாலஸ்தீன அராபியர்களின் வாழ்வியல் நிலை, பரிதாபத்தின் எல்லைகளை அவ்வப்போது எட்டிப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது!

மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளின் பிரச்சினைக்கு இஸ்ரேல் காரணமா? ஆம்! என்று சொல்வது நிச்சயம் தவறாகத்தான் முடியும். அப்பிரச்சினைக்கான உண்மை காரணம், முஸ்லீம் சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வின்மையே! வல்லரசுகளின் கைங்கர்யத்தால் உருவான வஹாபியிஸம் எனும் சிந்தாந்தம், அந்த நிலையைத் தொடர்ந்து தக்கவைக்க உதவுகிறது என்ற விமர்சனத்திற்கான சரியான பதில், முஸ்லீம் சமூகத்திடம் இன்னும் இல்லை என்றே தோன்றுகிறது.

சரி, சிறிய வரலாற்றுப் பயணத்தின் முடிவில், இப்போது மகாதிர் முகமதுவுக்கு மீண்டும் திரும்பும் நேரம் வந்துவிட்டது.
அன்று, முஸ்லீம்கள், யூதர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய மகாதிர் முகமது, இப்போது இஸ்ரேலை எச்சரிக்கிறார்!

அவருக்குத் தெரியும், முஸ்லீம்கள் யூதர்களிடமிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்று! அதேபோன்று, தற்போது இஸ்ரேலுக்கு தான் விடுக்கும் எச்சரிக்கையும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதும் அவருக்கு நிச்சயமாகத் தெரிந்ததுதான்..!

ஆனால், அவர் விடுத்த எச்சரிக்கை, ஒரு முஸ்லீம் நாட்டின் தலைவராக அவருக்கிருந்த அரசியல் தேவைகளில் ஒன்று என்பது நமக்கும் தெரியும்..!

 

– மதுரை மாயாண்டி

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-