சீனாவில் ஒரு பெருந்தொற்று நோயாக மாறும் திறன் கொண்ட ஒரு புதிய ஃப்ளு வைரஸ் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் சமீபத்தில் தென்பட்டதாகவும்,  இது பன்றிகளின் மூலம் மனிதர்களுக்கு பரவலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது மரபணு பிறழ்வுக்கு (Mutation) உட்படலாம் என்ற கவலையையும் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், மனிதர்களுக்கு எளிதாக பரவும் எனவும், கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். அவ்வாறு நடைபெறும் எனில், இது மீண்டும் ஒரு உலகளாவிய தொற்றாக முடியும் என்று கூறுகின்றனர்.
அதே சமயம் இது உடனடி பிரச்சனை இல்லை என்றாலும், இதை புறம்தள்ள முடியாது என்று விஞ்ஞானிகள் கவலைத் தெரிவித்துள்ளனர். ஏனெனில், இது மனிதர்களைப் பாதிக்க கூடும் எனக் கூறுவதற்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது. எனவே இதனை மிகவும் நெருக்கமாகவும், தீவிரமாகவும் கண்காணிக்க வேண்டும்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த புதிய வைரஸ் தற்போது உண்டானது என்பதால் இந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி மக்களிடையே குறைவாக இருக்கும். எனவே, உடனடியாக பன்றிகளில் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு மட்டுமின்றி, பன்றி வளர்ப்பு மற்றும் இறைச்சிக் கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களையும் நெருக்கமாக கண்காணிப்பதின் அவசியத்தையும் வழிமுறைகளையும் வடிவமைத்து விஞ்ஞானிகள் தேசிய அறிவியல் அகாடமியின் செயல்பாடுகளுக்கான இதழில் எழுதியுள்ளனர்.
உலகளாவிய மிரட்டல்
தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயை உலகம் முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இருந்தாலும், வல்லுநர்கள் உன்னிப்பாக கவனித்து வரும் நோய்களின் அச்சுறுத்தல்களில் இந்த புதிய இன்ப்ளுயன்சா ஃப்ளு வைரஸும் உள்ளது.
இந்த உலகம் சந்தித்த கடைசி பெருந்தொற்று ஃப்ளு காய்ச்சல் – 2009 ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் தொடங்கி பரவிய பன்றிக் காய்ச்சல் ஆகும். ஆரம்பத்தில் அனைவரையும் அச்சுறுத்தினாலும், பெரும்பாலான முதியவர்கள் நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்ததால், இது கட்டுப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக பல முறை ஏற்பட்ட இந்த காய்ச்சல் பல வயதானவர்களுக்கு இந்த காய்ச்சல் நோயெதிர்ப்பு சக்தியை அளித்திருந்தது ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டது.

ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள ஃப்ளு வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளால் இப்போதைக்கு மக்கள் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், இந்த வைரஸ் 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக் காய்ச்சல் வைரஸுக்கு ஒத்துள்ளது. ஆனால் அதன் மரபணுவில் சில மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த வைரஸினால் தீவிர ஆபத்து இல்லை என்றாலும், இந்த வைரஸை கண்டறிந்து ஆய்வு செய்து வரும் பேராசிரியர் கின்-சோ சாங் மற்றும் அவரது உடன் ஆய்வு செய்வபர்களும், இந்த வைரஸ் கடுமையான உலகளாவிய தொற்றாக மாறும் அனைத்து திறன்களையும் பெற்று இருப்பதாகவும், தீவிர கண்காணிப்பு தேவை என்றும் கூறியுள்ளனர்.
G4 EA H1N1 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வைரஸ், மனிதர்களின் சுவாசப்பாதையில் உள்நுழைந்து காற்றுப்பாதை செல்களில் தங்கி வளரும் தன்மைக் கொண்டது. அண்மையில் பன்றி வளர்ப்பு மற்றும் இறைச்சிக் கூடங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களிடம் செய்யப்பட ஆய்வுகளில், இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வைரஸ் தொற்றில் இருந்து இப்போது கிடைக்கும் தடுப்பு மருந்துகள் பாதுகாக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளனர்.

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் கின்-சோ சாங் பிபிசியில் பேசும்போது, “இப்போது நமது கவனம் அனைத்தும் கொரோனா வைரஸ் மீது திரும்பியிருந்தாலும், பல ஆபத்தான புதிய வைரஸ்களின் மீதான பார்வையையும் நாம் இழக்கக்கூடாது. இந்த புதிய ஃப்ளு வைரஸ் உடனடி பிரச்சினை அல்ல என்றாலும், நாம் அதை புறக்கணிக்கக்கூடாது,” என்றார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கால்நடை மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் வூட், பேசும்போது,  “இந்த வைரஸ் நமக்கு ஒரு நினைவூட்டலாக அமைந்துள்ளது,” என்றார். அதன்படி, நாம் பல புதிய வைரஸ்களினால் தொடர்ச்சியான அபாயத்திற்கு உட்பட்டுள்ளோம் என்றார். “நாம் விலங்குகளை பண்ணைகளில் வளர்க்கும்போது, காடுகளில் உள்ள விலங்குகளை விட, அதிக அளவு நேரடி தொடர்புக் கொள்ளும் வாய்ப்பை பெறுகிறோம். இந்த தொடர்பு, உலகளாவிய தொற்றை ஏற்படுத்தும் திறனுள்ள வைரஸ்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது,” என்றார். நாம் கவனமுடன் இருப்போம் !
English: Michelle RobertsHealth
தமிழில்: லயா