டில்லி,

ஸ்லாமியர்களிடையே நிலவி வரும் முத்தலாக் என்ற விவாகரத்து முறைக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

முஸ்லிம் மதத்தில்,  கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்டம், விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கூறியது.

அப்போது,  முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.

இதைத்தொடர்ந்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’’வை தயாரித்தது.

இந்த மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடந்த 28-ம் தேதி தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், மத்திய அரசு அதற்கு செவிசாய்க்காமல்,  பெண்களின் உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கவே இந்த மசோதா. இதில் மதத்திற்கு தொடர்பில்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கல்ர  கூறினார்.

மக்களவையில் அன்று  இரவு வரை நீடித்த விவாதத்துக்கு பிறகு முத்தலாக் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் தொடர்பான மசோதாவை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தாக்கல் செய்கிறார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பலம் அதிகமாக இருப்பதால், கடும் அமளி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறுவது கடினம் என கூறப்படுகிறது.