டில்லி.

ஸ்லாமியர்களின் முத்தலாக் சட்டத்தை முறைப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய அரசு கூறி உள்ளது.

முத்தலாக் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தால், மத்திய அரசு இஸ்லாமியர்களின் திருமண சட்டத்தை முறைப்படுத்த தனிச்சட்டம் கொண்டு வரும் என்று மத்தியஅரசு வழக்கறிஞர் கூறினார்.

முஸ்லிம் மதத்தில் மூன்று முறை தலாக் கூறி திருமண பந்தத்தை முறிக்கும் ஷரியத் சட்டம் நடைமுறை யில் உள்ளது. இந்த ஷரியத் சட்டத்தை ரத்து செய்யக்கோரி இஸ்லாமிய பெண்கள் பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை தலைமை நீதிபதி கெஹர் தலைமையில்  5 மதத்தை சேர்ந்த நீதிபதிகளின் அரசியல் சாசன பெஞ்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே மூன்று நாட்கள் விசாரணை நடந்துள்ளது. இன்று (மே 15) நான்காவது நாளாக விசாரணை நடைபெற்றது.

இன்றைய விசாரணையின்போது,  நீதிபதிகள், இஸ்லாமியர்களின் முத்தலாக் சட்டத்தை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தால், மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கும் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த  மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, ”முத்தலாக்கை ரத்து செய்து, அது சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் அறிவித்தால், இஸ்லாமியரின் திருமணம் மற்றும் விவாகரத்தை முறைப்படுத்த மத்திய அரசு தனிச் சட்டம் கொண்டு வரும்”  என்று கூறினார்.