சென்னை: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு, ‘800’ என்ற பெயரில் படமாகிறது.  இந்த படத்தில்,  முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் 800 திரைப்படத்தில்இருந்து விலகிக்கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் நடிகர் விஜய் சேதுபதிக்கு அறிவுறுத்திஉள்ளார். அதற்கு விஜய் சேதுபதி நன்றி தெரிவித்து உள்ளார்.

 

 இயக்குனர் பாரதிராஜா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில்,  விஜயேசேதுபதி,  மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்ந்தவர் முத்தையா முரளிதரன், அவர் என்ன சாதித்து என்ன பயன்? எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான் என காட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.  இதையடுத்து, கடந்த வாரம் முத்தையா முரளிதரன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,  இது நாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன் அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி. தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்து தான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில், விஜய்சேதுபதி 800 படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறது

என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தாப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன் எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை . அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்
ஒவ்வொரு முறை எனக்கு எற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்ததோ. திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன் அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது . நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதாவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை டக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முரளிதரனின் அறிக்கைக்க, விஜய்சேதுபதி,  நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.