முத்தூட் நிதி நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் அலெக்சாண்டர் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில், அவர் பலத்த காயமடைந்தார்.

 

முத்தூட் நிதி நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் அலெக்சாண்டர் கொச்சியில் தனது காரில் பயணித்த போது, மர்ம நபர்களால் கல்வீசப்பட்டு, பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அலெக்சாண்டர் நகரில் உள்ள மருத்துவ அறக்கட்டளை மருத்துவனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிவிப்புகளை மருத்துவமனை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் தொலைக்காட்சி செய்தி சேனல்களால் ஒளிபரப்பப்பட்ட தாக்குதல் தொடர்பான காட்சிகள், அலெக்ஸாண்டர் பயணம் செய்த காரின் மீது மர்ம நபர் ஒருவர் கல் வீசியிருப்பது தெளிவாகியுள்ளது. அந்த நபர் வீசிய கல், காரின் கண்ணாடியை உடைத்து, நிதி நிறுவனத்தின் இயக்குனரான ஜார்ஜ் அலெக்சாண்டரை தாக்கியுள்ளது. அந்த காட்சிகளின் படி, கல் வீசிய நபர் நீல நிற சட்டை மற்றும் வேட்டி  அணிந்திருக்கிறார்.

முன்னதாக கேரளாவில் முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு நடந்து வரும் நிலையில், ஆளும் இடதுசாரிகள் அரசுடன் இணைந்த தொழிற்சங்கங்கத்தினர் உதவியுடன், மூத்தூட் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சிலர், ஊதிய உயர்வு, சிறந்த ஊக்கத்தொகை மற்றும் 166 தொழிலாளர்களை முன்னறிவிப்பின்றி சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொச்சியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை தரப்பில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.